பெர்ப்பச்சுவல் ட்ரெஸரிஸ் குழுமத்தின் நிறுவனமொன்றினால், அதன் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸ் மற்றும் அவரின் தந்தை ஆகியோருக்கு கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 35 கோடி ரூபா அளவான பணத்தை லாப பங்காக செலுத்திமை கண்டறியப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஆணைக்குழு விசாரணைகளின்போது, பெர்ப்பச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலியேனவிடம் தொடர்ந்து 10 நாளாகவும் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
குறித்த நிறுவனம் அதன் தாய் நிறுவனமான பெர்ப்பச்சுவல் எசெட் மெனேஜ்மன்ட் நிறுவனத்துக்கு 44 கோடியளவான லாப பங்கை கடந்த ஆண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் வழங்கியதாக இதன்போது சாட்சியாளர் கூறியுள்ளார்.
அந்த லாப பங்கின் 35 கோடி ரூபா பெர்ப்பச்சுவல் கெபிடல் ஹோல்டின்ஸிக்கு உரிமையாளராக உள்ள அர்ஜுன் அலோஸியஸ் மற்றும் அவரின் தந்தையான ஜொப்ரி அலோஸியஸ் ஆகியோருக்கு கிடைத்ததாக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, குறித்த லாப பங்கிற்கு மேலும் பணத்தை சேர்த்து, வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்களின் 64 கோடி ரூபா அளவு பெறுமதியான வாக்குரிமை பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினை பிரதிநிதித்துவப்படுத்தாத தரப்பினர் சாட்சியாளர்களை விசாரணைக்கு உட்டுபடுத்துவது இன்றுடன் நிறைவடைந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், பெர்ப்பச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் குரல் பதிவுகள் மற்றும் 10 ஆயிரம் அளவான எழுத்தாவணங்கள் உள்ளிட்ட சாட்சிகளை விசாரிக்க குறைந்தது ஒருவார காலம் அவசியம் என சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, பெர்ப்பச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேனவிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்ள எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஆணைக்குழுவால் ஒத்திவைக்கப்பட்டன.