இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்க, தமிழக அரசாங்கம் முனைப்புக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் அதனை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி தமிழக அரசாங்கத்தினால் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு – தூத்துக்குடி அல்லது தலைமன்னார் – ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு இடையில் இந்த கப்பற்சேவையை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து சுயவிருப்பின் பேரில் இலங்கை திரும்புகின்ற அகதிகளையும் ஊக்கப்படுத்துமாறும் தமிழக அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.