முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை தோற்கடித்த மக்களை பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
கடந்தகால ராஜபக்ஷ ஆட்சின் போது நாட்டின் மீது விடுக்கப்பட்டிருந்த சவால்கள் பலவற்றை வெற்றி கொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிர்வாக காலப்பகுதியில் மேற்கொண்ட ஊழல் மோசடி மற்றும் பாரிய குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் பிரதிபலனாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள் சட்டவிரோதமாக சொந்தமாக்கிக் கொண்டிருந்த 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் தற்போது நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்தின் கீழுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வௌிநாட்டினருக்கு அரச சொத்துக்களை விற்கின்றனர், அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்துகின்றனர் என்று கூறி மக்களை தூண்டிவிடும் விகாரை அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய துரோகங்களை இழைத்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.