தமிழ் சினிமாவில் சகல கலா வல்லவனாக திகழ் பவர் நடிகர் கமல்ஹாசன்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவர் அவ்வப்போது அரசியலில் கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெறுகி விட்டதாக கூறி இருந்தார்.
அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கமல் கூறிய இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கமலுக்கு எதிராக அமைச்சர்கள் கண்டன குரல் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து கமலுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.
இது கமலுக்கு உற்சாகத்தை அளித்தது. அரசு துறைகளில் நிலவும் ஊழல் குறித்து அமைச்சர்களின் முகவரிக்கு ரசிகர்கள் இ-மெயிலில் வேகமாக புகார் அளிக்க வேண்டும் என்று கமல் கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்று ரசிகர்களும் செயல்பட்டனர்.
இப்படி தொடர்ந்து டுவிட்டரில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வரும் கமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாக குற்றம் சுமத்தினார்.
தமிழகத்தில் ஏராளமான ஊழல் குற்றங்கள் நடந்துள்ளன. அப்படி இருக்கும் போது முதலமைச்சர் ஏன் ராஜினாமா செய்யவில்லை.
அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எந்த கட்சியும் கோராதது ஏன்? என்றும் கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ள கமல் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் குற்றம் சுமத்தினார்.
இந்த நிலையில் கமல் புதிய அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது பதிவுகளில் திராவிடம் என்கிற வார்த்தையை கமல் அதிகமாக இடம் பெற செய்வார்.
எனவே கமல் கட்சி தொடங்கினால் அதில் திராவிடம் என்கிற சொல் கண்டிப்பாக இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் கமல் அளித்த பேட்டி ஒன்றில் என்னை கட்சி தொடங்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் கமல் புதிய கட்சியை தொடங்கி தனது சமூக சிந்தனை கொண்ட கருத்துக்களை இன்னும் வேகமாக வெளிப்படுத்த வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
அவர்களது எண்ணத்தை நிறைவேற்றும் விதத்தில் புதிய கட்சியை ஆரம்பித்து கமல் அரசியலில் குதிப்பார் என்றே தெரிகிறது.
தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் திடீர் மரணம், கருணாநிதியின் ஓய்வு ஆகியவை மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த இடத்தை குறி வைத்தே கமல் காய் நகர்த்தி வருகிறார்.
இப்போதைய சூழலில் தமிழக மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் புதிய தலைவர் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த தலைவர் கமலாக கூட இருக்கலாம் என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.