உதவித்தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

368 0

201608131056339368_disabilities-held-over-protest-before-the-collector-office_SECVPFவிழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும்.

படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பணிதளப் பொறுப்பாளர் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.கோரிக்கை நிறைவேறாததால் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.

இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். அவர்களிடம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், கோட்டாட்சியர் ஜீனத்பானு, போலீஸ் துணை சூப்பிரண்டு சுருளிராஜா, இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கலெக்டர் லட்சுமி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் இரவு 9 மணியளவில் கலெக்டர் லட்சுமி மாற்றுத் திறனாளிகள் சிலரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே நள்ளிரவிலும் போராட்டம் நீடித்தது. சோர்வடைந்த மாற்றுத் திறனாளிகள் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் படுத்து தூங்க ஆரம்பித்தனர்.இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 141 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.