சுவிசில் வெகு சிறப்பாக நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான ‘தமிழர் விளையாட்டு விழா 2017

16543 0

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 16வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா 2017 ஓகஸ்ட் மாதம் 12ம், 13ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள ளுpழசவயடெயபந னுநரவவறநப மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. புலம் பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறையினரிடம் தாயகம் நோக்கிய தேடலை ஏற்படுத்தும் நோக்கில் தமிழர் இல்லம் இச்சுற்றுப் போட்டியினை நடாத்தி வருகின்றது. நடைபெற்று முடிந்த இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிரித்தானியா, கனடா நாடுகளிலிருந்தும் அணிகள் கலந்து சிறப்பித்திருந்தன.

இருதினங்களும் காலை 09.00 மணியளவில் பொதுச்சுடருடன் சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடியேற்றலைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் தமிழீழ விளையாட்டுத்துறை, தமிழர் இல்லம் ஆகிய கொடிகள் ஏற்றப்பட்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், வீரர்கள் உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றுடன் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆண்கள் பெண்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிளித்தட்டு, துடுப்பாட்டம், முதலான குழுவிளையாட்டுக்களில் இம்முறை அதிக எண்ணிக்கையிலான அணிகள் களமிறங்கியதுடன் உதைபந்தாட்டப் போட்டியில் ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் பல அணிகள் மோதின. வளர்ந்தோர்; உதைபந்தாட்ட இறுதியாட்டம் சனியன்று இரவு மின்னொளியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

சிறுவர்கள் மற்றும் இளையோர்களுக்கான தடகளப் போட்டிகளிலும் இவ்வருடம் பல போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்ததுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலைகளில்; இடம்பெற்ற சங்கீதக்கதிரை, எமது பாரம்பரிய விளையாட்டுக்களான தாச்சி (கிளித்தட்டு), தலையணை அடி, கண்கட்டி முட்டி உடைத்தல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் முண்டியடித்தமையை காண முடிந்தது.

இருதினங்களும் சிறுவர்கள், இளையோர்கள், வளர்ந்தோர்கள் என பல நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் குதூகலத்துடனும், போட்டிகளில் பங்குபற்றியதுடன்; அனைத்துக் போட்டிகளிலும் அணிகள் விளையாட்டுத் திறனுடன் மூர்க்கத்துடன் மோதிக் கொண்டாலும், போட்டிகள் முடிந்தவுடன் மிகவும் நட்புடனும், விளையாட்டு உணர்வுடனும் நடந்து கொண்டமையானது சிறப்பான அம்சமாக அமைந்திருந்ததோடு போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு சுற்றுக்கிண்ணங்களோடு வெற்றிக்கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகள் கட்டமைப்பு சுவிசினால் முன்னெடுக்கப்பட்ட தாயக அரசியல் கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவி வழங்குவதற்கான நல்வாய்ப்புச் சீட்டிழுப்புக்கான அதிஸ்டமும் பார்க்கப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டது.

எதிர்காலத்தில் விளையாட்டுத்துறையில் அனைத்துலக ரீதியில் சாதிக்க கூடிய திறமை மிக்க தமிழ் இளந்தலைமுறையினர் புலம்பெயர்ந்த நாடுகளில் வளர்ந்து வருகின்றமையை இம்முறை விளையாட்டு விழாவில் அவதானிக்க முடிந்தது. இது போன்ற விளையாட்டு நிகழ்வுகள் மூலம் புலத்திலுள்ள இளையோர் மத்தியில் தாயகம் குறித்த புரிதல் விரிவடைகின்றது.

இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

 

Leave a comment