திருப்பூரில் கண்டெய்னர்களில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள்-விசாரணை நடத்திய அதிகாரிகள் பட்டியல் சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த 3 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் சமயத்தில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் ரூ.570 கோடி பணம் யாருக்கு சொந்தமானது என்று தேர்தல் அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த பணம் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அந்த வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்குரிய உரிய ஆவணங்கள் இல்லை என்று முதலில் கூறப்பட்டது.
அதன்பின்னர் அது கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் வருமான வரித்துறையினருக்கு காட்டப்பட்டது. அந்த பணம் முழுவதும் தற்போது கோவையில் உள்ள வங்கியில் தான் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரூ.570 கோடி பணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதைதொடர்ந்து இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிபதி சுப்பையா உத்தரவிட்டார். ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சி.பி.ஐ. தனது முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.
இதனால் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம் குறித்து திருப்பூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன் தினம் முதல் விசாரணை செய்தனர். திருப்பூர் கலெக்டர் ஜெயந்தி, மற்றும் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர்.
அதைதொடர்ந்து கோவையில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தொடங்கினர். கண்டெய்னர் லாரிகளை பிடித்த தாசில்தார் விஜயகுமார், நேற்று கோவையில் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கூடுதல் ஆவணங்களை ஒப்படைத்தார்.
இன்ஸ்பெக்டர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஸ்டேட் வங்கியில் இருந்து எந்த கணக்கில் இருந்து பணம் கொண்டு செல்லப்பட்டது, அதற்கு உண்டான ஆவணங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பணம் பறிமுதல் நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்ற அதிகாரிகள் பட்டியல், பறிமுதல் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி பதிவுகள் ஆகியவை சி.பி.ஐ.யிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ஏட்டு சித்ரா, ஆயுதப்படை போலீஸ் கண்ணன், ஜீப் டிரைவர் சந்திரசேகர் ஆகியோர் முதல் கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர்.இதற்கிடையே நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை முடித்து கொண்டு சென்னை திரும்பினர்.