வடமாகாண புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களுக்கு வன்னிப் பராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துடுத்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 14 ஆம் திகதி வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள புகையிரத கடவையில் பாதுகாப்பு ஊழியர் மற்றும் பாதுகாப்பு தடை இல்லாத நிலையில் சமிக்ஞை விளக்கு மட்டும் பொருத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி அதன் உரிமையாளர் அவ்விடத்திலயே பலியாகியுள்ளார் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
அவ்விடத்தில் கடந்த 15 ஆம் திகதி நிரந்தர பாதுகாப்புத் தடையையும், பாதுகாப்பு கடவை காப்பாளர் ஒருவரையும் நியமிக்கக் கோரி பொது மக்கள் புகையிரதத்தை வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார்கள்.
தாண்டிக்குளம் புகையிரத கடவை பாதை ஊடாக நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு அதிகமான பொது மக்களும், பாடசாலை மாணவர்களும் கடந்து செல்கிறார்கள். ஆனால் இந்த கடவையில் சமிக்ஞை விளக்கைத் தவிர புகையிரத கடவைக் காப்பாளர்களோ அல்லது புகையிரத காப்புத் தடைகளோ இல்லாத காரணத்தால் விபத்துக்கள் நடைபெறுவதற்கு கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.
பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகள் வட மாகாணத்தில் தொடர்ச்சியாக எரிவதால் சில பழுதடைந்த நிலையிலும் காணப்படுகிறது. இந்த சமிக்ஞை விளக்குகள் மட்டும் புகையிரத கடவை பொது மக்கள் கடப்பதற்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்க முடியாது.
யுத்தத்திற்குப் பின் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்ட நான்கு வருட காலத்தில் 41 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் 35 பேர் பரிதாபகரமாக உயிர் இழந்துள்ளார்கள் என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த விபத்துக்கள் பெரும்பாலனவை பாதுகாப்புக் கடவை ஊழியர்கள் இல்லாத கடவைகளில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்திலுள்ள புகையிரத கடவைகளில் 7500 ரூபாய் ஊதியத்திற்கு பொலிஸ் திணைக்களத்தால் தற்காலிக ஊழியர் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் இந்த ஊதியம் அவர்களின் வாழ்கையை கொண்டு செல்வதற்கு போதாமையால் கடமையிலிருந்து விலகியுள்ளார்கள். இப்படியான காலியான கடவைகளிலேயே கோர விபத்துக்கள் நடைபெற்று வருகிறமை அவதானிக்கத்தக்கது.
சில கடவைகளில் சிவப்பு விளக்குகள் தொடர்ந்து எரிவதால் புகையிரதம் வருகிறதா இல்லையா என தெரிந்துகொள்ள முடியாத நிலையில் இங்குள்ள பொது மக்கள் இருக்கிறார்கள். ஆகவே சகல புகையிரதக் கடவைகளிலும் சமிக்கை விளக்குகளுக்கு மேலதிகமாக கடவைக் காப்பளர்களையும், பாதுகாப்புக்கு தடைகளையும் பொருத்தும்படியும் தற்போது தற்காலிக அடிப்படையில் கடவைக் காப்பாளர்களாக கடமையாற்றிக்கொண்டிருப்பவர்களைக் கொண்டு இந்த வெற்றிடங்களை நிரப்பி உதவுமாறும் தங்களை தயவாகக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.