ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்காக சிரியாவுக்கு சென்ற லண்டன் மாணவி ரஷியா நடத்திய வான் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்தவர், கதிஜா சுல்தானா (வயது 16). பள்ளிக்கூட மாணவி.
இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி தனது தோழிகள் ஷமிமா பேகம் மற்றும் அமிரா அபாசுடன் ஒரு நாள் உல்லாசப்பயணம் மேற்கொள்ளப்போவதாக வீட்டில் கூறி விட்டு, ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்காக அவர்களுடன் சிரியாவுக்கு சென்றார். ஆனால் அங்கு ரஷியா நடத்திய வான் தாக்குதலில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராக்காவில் நடந்த தாக்குதலில் அவர் இறந்திருப்பதாக தெரிய வந்துள்ளதாக அவரது குடும்ப வக்கீல் தாஸ்னிம் அகுன்ஜீ தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த தகவலை தம்மால் உறுதி செய்ய முடியவில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “மாணவி கதிஜா சுல்தானா சிரியாவில் ஏமாற்றம் அடைந்து, ஐ.எஸ். இயக்கத்தில் இருந்து விலகி, நாடு திரும்ப விரும்பினார். அதே நேரத்தில் அப்படி தப்ப நினைத்து, ஐ.எஸ். தளபதிகளிடம் சிக்கினால் கொடூரமான தண்டனை அனுபவிக்க நேரும் என்பதால் அவர் நாடு திரும்ப முயற்சிக்கவில்லை” என கூறினார்.