மக்கள் எதிர்ப்பதால் ஓ.என்.ஜி.சி. பணிகளை கைவிட வேண்டும்: திருநாவுக்கரசர்

292 0

மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஓ.என்.ஜி.சி. பணிகளை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என தொடர் காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்குள்ள அய்யனார்கோயிலில் நேற்று 36-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். அப்போது கிராம மக்கள் திருநாவுக்கரசரிடம் வலியுறுத்தி பேசியதாவது:-

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி ஆய்வால் நீர்வளம் மற்றும் நிலவளம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் காவி நிறமாகி விட்டது. இத்தகைய சுகாதாரமற்ற நிலையால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் இங்கு ஓஎன்ஜிசி ஆய்வு பணிகளை தொடங்கியது. எனவே ஓஎன்ஜிசி நிறுவனத்தை இங்கிருந்து வெளியேற்ற காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

விவசாயிகள் கதிராமங்கலம், நெடுவாசலில் போராட்டம் நடத்துகின்றனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறி அய்யாகண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடக்கிறது. ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரச்சனைக்காக தான் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடந்த 17 வருடம் முன்பு கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆய்வு பணிகள் தொடக்கப்பட்ட போது மக்கள் அனுமதி அளித்தனர். தற்போது குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்து நிலத்தடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

கதிராமங்கலத்துக்கு வெளியூர்களிலிருந்து யாரையும் வரவிடாமல் தடுத்து ஊரையே தனி தீவாக போலீஸ் வைத்துள்ளது, போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வரும் மாணவர்களை தடுப்பது தேவையற்றது. ஓஎன்ஜிசி ஆய்வு பணி தேவையில்லை எனக்கூறி மக்கள் போராடுகின்றனர். மக்களின் ஜனநாயக உரிமைகளை தடுக்கும் வகையில் காவல்துறை கொண்டு அச்சுறுத்துவது கண்டனத்திற்குரியது.

கதிராமங்கலத்தில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கலாம். மக்களுக்காக தான் திட்டங்கள். மக்கள் ஏற்றுக் கொண்டால் தான் அதனை செய்ய வேண்டும். தற்போது மக்கள் வேண்டாம் என்று சொன்னால் அதனை கைவிட வேண்டும்.

கதிராமங்கலம் மக்களை மத்திய அரசு சார்பிலோ, மாநில அமைச்சர்களோ, எம்.பி.யோ யாரும் இதுவரை வந்து பார்க்காமல் உள்ளனர். மக்கள் பிரச்சனைகளை நேரில் வந்து கேட்பதில் என்ன இடையூறு உள்ளது. பிரச்சனைகளை தீர்ப்பது என்பது ஒன்று. கேட்பது என்பது ஒன்று. மக்களை சந்தித்து பிரச்சனையை கேட்கவே இல்லை என்பதால் தான் மக்கள் ஆத்திரத்துடன் உள்ளனர். காங்கிரஸ் கட்சி மக்களுக்கு துணையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், டிஆர்.லோகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment