‘பிரச்சினைகள் தீர இந்தியாவும், சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனராணுவம் ரோடுபோட முயன்றது. அதை இந்தியா தடுத்து நிறுத்தியது. அதை தொடர்ந்து இருநாடுகளும் அங்கு தங்களது ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அங்கு கடந்த 50 நாட்களாக பதட்டம் நிலவுகிறது.
இந்த நிலையில் காஷ்மீரில் லடாக் பகுதியில் புகழ் பெற்ற ‘பாங்காங்’ ஏரிக்கரை பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியுள்ளது. அப்பிரச்சினையும் விசுவரூபம் எடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா அரசின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீதர் நயூர்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை காரணமாக ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் எல்லையில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இதை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவும், சீனாவும் அமர்ந்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்மூலம் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்றார்.