இனவெறிக்கு எதிரான ஒபாமாவின் கருத்து டுவிட்டரில் புதிய சாதனை படைத்தது

224 0

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள விர்ஜினியா மாநிலத்தில் இருதரப்பினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டுவிட்டரில் வெளியிட்ட கருத்து புதிய சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் 1861-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது விர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்புப் படையை ராபர்ட் இ லீ என்பவர் வழிநடத்திச் சென்றார். சார்லொட்டஸ்வில்லி நகரில் உள்ள ஒரு பூங்காவில் ராபர்ட் இ லீ சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது சிலை அகற்றப்பட இருப்பதாக அங்குள்ள மக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனைக் கண்டித்து கடந்த வாரம் வலதுசாரி வெள்ளை இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் சார்லொட்டஸ்வில்லி நகரில் பேரணி நடத்தினர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் எதிர்ப்பு பேரணி நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

மோதல் கலவரமாக மாறிய சூழ்நிலையில், பேரணி கூட்டத்துக்குள் தாறுமாறாக புகுந்த ஒரு கார் பலர்மீது வேகமாக மோதியது. இதில், 32 வயது பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

கலவரம் மேலும் பரவாமல் தடுக்க விர்ஜினியாவில் அவசர நிலை பிரகடனம் செய்து கவர்னர் உத்தரவிட்டார். மேலும், பிரச்சனை தீவிரமாகாமல் தடுப்பதற்காக சார்லொட்டஸ்வில்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

பலியான பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இன துவேஷங்களை புறம்தள்ளி அனைவரும் அமெரிக்கர்களாக ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நடந்த சம்பவத்துக்கு இருதரப்பினருமே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சார்லொட்டஸ்வில்லி கலவரம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து கடந்த சனிக்கிழமை டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

மற்றவரின் நிறம், பின்னணி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரை வெறுப்பதற்காக யாருமே பிறக்கவில்லை என ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு இனம், நிறம், மதங்களை சேர்ந்த பிள்ளைகள் ஒன்றுகூடி விளையாடுவதை ஜன்னல் வழியாக ஒபாமா பார்த்து ரசிப்பது போன்ற புகைப்படத்துடன் வெளியான இந்த டுவீட் சில மணி நேரங்களில் வைரலாக மாறியது. 12 லட்சம் பேர் அவரது கருத்தை ரிடுவீட் செய்திருந்தனர்.

திங்கட்கிழமை காலை பத்து மணி நிலவரப்படி, 30 லட்சம் பேர் அவரது கருத்தை ஆமோதித்து லைக் செய்திருந்தனர். டுவிட்டர் வரலாற்றில் மிகவும் விரும்பப்பட்ட ஐந்தாவது டுவீட்டாக ஒபாமாவின் கருத்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிரபல பாப் பாடகி அரியானா கிரான்டே கடந்த மே மாதம் நடத்திய இசை நிகழ்ச்சியின்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். நெஞ்சைப் பிழியும் இந்த சோகம் தொடர்பாக அரியானா கிரான்டே அப்போது டுவீட் செய்திருந்தார். 27 லட்சம் லைக்களுடன் அவரது டுவீட் இதுவரை முதலிடம் பிடித்திருந்தது.

மறைந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்று வரிகளை மேற்கோள் காட்டி தற்போது ஒபாமா வெளியிட்ட இந்த டுவீட், அரியானா கிரான்டேவின் டுவீட்டை பின்னுக்குத் தள்ளி 30 லட்சம் லைக்களுடன் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

Leave a comment