தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், துணை பொதுச் செயலாளருமான எஸ்.பி.சற்குண பாண்டியன் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
இருதய ஆபரேஷன் செய்யப்பட்ட அவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த அவரது உடல்நிலை நேற்று இரவு மோசம் அடைந்தது. இரவில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த சற்குணபாண்டியன் தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர். கணவர் பெயர் சற்குண பாண்டியன், 1989-ல் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனார். 1996 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று சமூகநலத்துறை அமைச்சரானார்.
கட்சியில் மகளிர் அணி துணை செயலாளர், மாநில செயலாளர், தலைமை செயற் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளை வகித்தார். மகளிர் ஆணையத்தின் தலைவராகவும், பொறுப்பு வகித்த அவர் தற்போது துணை பொதுச்செயலாளராக இருந்தார்.
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நன்மதிப்பை பெற்ற சற்குண பாண்டியன் 12 வயது முதலே மேடை பேச்சாளராக உருவாகினார்.சற்குணபாண்டியனின் உடல் ராயபுரம் வழக்கறிஞர் சின்னதம்பி முதல் தெருவில் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சற்குண பாண்டியன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம், எம்.எல்.ஏ.க்கள் ப.ரெங்கநாதன், பகுதி செயலாளர்கள் ஏ.டி.மணி, சுரேஷ், மனோகரன், கணேஷ் மற்றும் பாண்டிச்செல்வம், இளைய அருணா, புழல் நாராயணன், எபனேசர் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சற்குண பாண்டியனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. அவரது வீட்டில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு காசிமேடு சுடுகாட்டை சென்றடைகிறது. அங்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.மறைந்த சற்குணபாண்டியனுக்கு பொன்பாண்டி, முத்துசோழன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் முத்துசோழனின் மனைவி சிம்லா முத்துசோழன் சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
சற்குண பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-சற்குண பாண்டியன் சிறு வயது முதலே தனது பேச்சாற்றல் மூலமாக கட்சி பணியில் ஈடுபட்டார். சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், மகளிர் அணி செயலாளராகவும் கடைசி காலம் வரை கட்சிக்காக பாடுபட்டவர். அவருடைய மறைவு தி.மு.க.வினருக்கும், மகளிர் சமுதாயத்திற்கும் மாபெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.