அண்டைநாடான உக்ரைனுடனான தூதரக தொடர்புகளை முறித்து கொள்வோம் என ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார். 1991-ல் சோவியத் யூனியன் என்ற அமைப்பு உடைந்து பல சிறிய நாடுகளாக பிளவுபட்ட பின்னர் கடந்த 2014-ல் உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது.
கிரிமியாவை ரஷியா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து கொள்வது தொடர்பாக அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்திருந்த உத்தரவு செல்லாது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. கிரிமியாவை இணைத்தது தொடர்பான ரஷ்யாவின் ஆணையை தள்ளுபடி செய்வதாக உக்ரைன் நாட்டின் ஐ.நா தூதர் வோலோடைமர் எல்சென்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து கிரிமியா என்ற தனிநாட்டை பிரித்து உருவாக்க நடைபெற்ற போரில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியான நிலையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பூசல்கள் அதிகரித்து வருகிறது. கிரிமியா விவகாரத்தில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் பகை மூள்வதற்கு முன்னதாக உக்ரைனுக்கு ரஷியா 300 கோடி அமெரிக்க டாலர்களை கடனாக அளித்திருந்தது.
உக்ரைன் பிரச்சனையால் மனக்கசப்பு ஏற்பட்ட பின்னர், மேற்படி தொகையை கேட்டு லண்டனில் உள்ள கோர்ட்டில் ரஷிய நிதித்துறை அமைச்சகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால், ரஷியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வது தொடர்பாக உக்ரைன் ஆலோசித்து வருவதாகவும், தற்போது கிரிமியா மற்றும் ரஷியாவின் இதர பகுதிகளிலும் வாழும் தங்கள் நாட்டை சேர்ந்த சுமார் 40 லட்சம் மக்களின் நலன் கருதி இந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் உக்ரைன் தெரிவித்திருந்தது.
மேலும், பிரிந்துசென்ற கிரிமியாமீது உக்ரைன் நாட்டு தலைமையின் கட்டளைப்படி போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்து கொள்வது தொடர்பாக ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் ஆலோசித்து வருவதாக ரஷிய அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
உக்ரைனுடனான தொடர்புகளை முறித்து கொள்வதில் பிரதமருக்கு உடன்பாடில்லை, ஆனால், தற்போது நிலவிவரும் சூழ்நிலையில் எவ்வித மாற்றமும் உண்டாகவில்லை என்றால் உக்ரைனுடனான தூதரக உறவுகளை முறித்து கொள்வதை தவிர வேறு வழியே இல்லை என ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.