பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர். திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மரக்கன்றுகளை நடுகை செய்துள்ளனர்.
பல்வேறு நாடுகளையும் சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ஐசெக் (AIESEC) எனப்படும் இவ்வமைப்பு அரச சார்பற்ற மற்றும் அரசியல் சார்பற்ற ஒரு அமைப்பாகும். இது அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதன் மூலமும் தனிமனித ஆளுமையை விருத்தி செய்வதன் மூலமும் மானுடத்தின் முக்கியத்துவத்தை முழுமைபெறச் செய்யவும் சமாதானத்தை ஏற்படுத்தவும் முயன்று வருகிறது.
ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை உறுப்பினர்களாகக்கொண்டு சர்வதேச ரீதியில் இயங்கிவரும் ஐசெக்கின் 20 மாணவர்கள் இலங்கை களனி பல்கலைக்கழகத்துக்கு தற்போது வருகைதந்துள்ளனர். களனி பல்கைலைக்கழகத்தின் சூழல் பேணல் மற்றும் சூழல் முகாமைத்துவக் கற்கைநெறி பயிலும் மாணவர்களுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் ‘பசுமையை நோக்கி’ என்னும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதில் ஒரு கட்டமாகவே இன்று திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் இப்பன்னாட்டு மாணவர்கள் ஒன்றுகூடி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மரநடுகையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் யாழ் வலயக் கல்விப்பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா, யாழ் கோட்டக் கல்விப்பணிப்பாளர் அ.சண்முககுமார், நல்லூர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எவ்.எக்ஸ்.அன்ரன், முத்துத்தம்பி மகாவித்தியாலயப் பிரதிஅதிபர் க.மகேஸ்வரன் ஆகியோரும் முத்துத்தம்பி மகாவித்தியாலய மாணவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.