தமிழ் பேசும் பொலிஸாரின் ஆளனி பற்றாக்குறையை நீக்குவதற்கு தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸில் இணைந்து கொள்ள வேண்டும்- வடக்கு முதலமைச்சர்(காணொளி)

427 0

யாழ்ப்பாணத்தின் பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பு மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றதன் பின்னர் வடக்கு முதலமைச்சர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சருக்கும் யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

கடந்த மாதத்திற்கும்,இம்மாதத்திற்கும் இடையிலான சந்திப்பிற்குமிடையில் முன்னேற்றங்கள் காணப்படுவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் ஒவ்வொரு மாதமும் இவ்வாறான சந்திப்பை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாத சந்திப்பிற்கும் இன்றைய சந்திப்பிற்கும் இடையில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாகவும், ஆவா குழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் பொலிஸாரின் ஆளனி பற்றாக்குறையை நீக்குவதற்கு தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மணல் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர் இதற்கு காரணமாக அனுமதிப்பத்திரம் மூலம் மணல் வழங்கும் நடைமுறை ஏற்பட்டுள்ளதால் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளதுடன் மணலின் விலையும் குறைவடைந்துள்ளது என்று பொலிஸார் கருத்து தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையங்களிற்கு கட்டடம் இல்லாத பிரச்சினை தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குடாநாட்டில் குடும்பப்பிரச்சினைகள் அதிகரித்துள்ள காரணத்தால் குடும்ப ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் பொலிஸார் கூறியுள்ளதாகவும் முதமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீவகம் ஊர்காவற்றுறையில் 5000 கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், முக்கியமான தெருவீதிகளில் வீதி விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் கூட்டத்தில் பொலிஸாரால் முன்வைக்கபட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave a comment