சர்வதேச நீதி கோரி ஆனையிறவிலிருந்து ஐநா அலுவலகம் வரை நடைபவனி

334 0

2213தமிழர் மீதான படுகொலைக்கு நியாயம் கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தியும் கோரி நீதிக்கான நீண்ட பயணத்திற்கான அழைப்பை கிளிநொச்சி கிராம மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும், பொது அமைப்புக்களின் ஒன்றியமும் அழைப்பு விடுத்துள்ளன.

எதிர்வரும் 22ஆம் திகதி காலை 8.00 மணிக்கு ஆனையிறவில் ஆரம்பிக்கும் நடைபவனி, கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐநா செயலகத்தை சென்றடையவுள்ளது.

தமிழர் தாயகமான நயினாதீவில் 60 அடி பத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை, முல்லைத்தீவு கருநாட்டான்கேணகியில் சித்திவிநாயகர் இடிக்கப்பட்டு அதில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை, சாம்பல்தீவில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை, திருக்கோணேஸ்வர ஆலயச் சூழல் சிங்கள மயமாக்கப்பட்டமை, தம்புள்ளை காளிகோயில் இடிக்கப்பட்டமை, கிளிநொச்சியில் லும்பினி விகாரை அமைப்பதற்காக தனியார் காணியை அபகரித்தமை, இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயக் காணியில் சட்டவிரோதமாக புத்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,மாங்குளம், இரணைமடுச்சந்தி, பரந்தன், கிளிநொச்சி, திருக்கேதீஸ்வரம், பூநகரி வாடியடி, கனகராயன்குளம் பெரியகுளம், கிருஸ்ணபுரம் போன்ற பகுதிகளில் அத்துமீறிப் புத்தர் சிலைகளை நிறுவிப் பௌத்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்றமை மற்றும் பள்ளிக்குடா புனித தோமையர் தேவாலயத்தையும் இரணைதீவு புனித அந்தோனியார் தேவாலயம் என்பவற்றைக் கடற்படை ஆக்கிரமித்தமை என்பவற்றுக்கு எதிராகவும்,

மீள்குடியேற்றம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தல், இனப்படுகொலைக்கு நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்த நடை பயணம் இடம்பெறவுள்ளது.

நீதி கோரும் நீண்ட நடை பயணத்தில் அரசியல் தலைவர்கள், மதகுருமார்கள், மத அமைப்புக்கள், கிராமிய சமூக பொதுசன நிறுவனங்கள், வர்த்தகப் பெருமக்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு கிளிநொச்சி மாவட்டக் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் அழைப்பு விடுப்பதாக சமாசத்தின் தலைவர் கறுப்பையா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.