தி.மு.க. ஆட்சியில் தான் முதன் முதலாக உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழகச் சட்டப் பேரவையில், தி.மு.க.வின் சார்பில் உரையாற்றிய கீதாஜீவன், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது தி.மு.க. அரசு தான் என்று கூறிய போது, அ.தி.மு.க. அமைச்சர்கள் குறுக்கிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது என்று மறுத்திருக்கிறார்கள்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் தந்து தேர்தலை நடத்தியது தி.மு.க. ஆட்சிதான் என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சில தகவல்களை இந்த நேரத்தில் நினைவுபடுத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் 1990-ம் ஆண்டு இறுதியில் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பின்னர், தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் நடைபெற்ற 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த அந்த ஆட்சியினர் முன்வரவே இல்லை.
1996-ம் ஆண்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 6-ல், “அடுத்து உங்களால் அமைக்கப்படும் தி.மு.க. அரசு, புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று உறுதி கூறுவதோடு, அது வெறும் அறிவிப்பாக இருந்து விடாமல், நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியை அளிக்கிறோம்” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
அவ்வாறு அறிவித்ததற்கிணங்க தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 6 மாநகராட்சிகள், 104 நகராட்சிகள், 635 பேரூராட்சிகள், 12,584 ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு 96-ம் ஆண்டு அக்டோபரில் 9 மற்றும் 12-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவதென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் முக்கியமான அம்சம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது தான். மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.
மொத்தம் 474 மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 161 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35 என்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மொத்தம் 28-ல் பெண்களுக்கு 10 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 4 என்றும் மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் பதவிகள் மொத்தம் 649-ல் பெண்களுக்கு 242 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 97 என்றும் நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மொத்தம் 106-ல் பெண்களுக்கு 35 என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 6 என்றும் இப்படியே ஒவ்வொரு பதவியிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் என்ற அளவிற்கு தொகுதிகள் பிரிக்கப்பட்டன.
சென்னை மேயர் தேர்தலில் பிரசாரம் மிகவும் கடுமையாக இருந்தது. எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து எப்படியாவது ஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியோடு பணியாற்றிய போதிலும், ஸ்டாலினைப் பொறுத்தவரையில் கடுமையாக உழைத்தார்.
14-10-1996 அன்று உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணி அறிவிக்கப்பட்டன. தி.மு.க., த.மா.கா. கூட்டணியே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
மேயர் தேர்தலில் சென்னையில் ஒவ்வொரு கட்சியின் வேட்பாளரும் பெற்ற வாக்குகள்- மு.க. ஸ்டாலின்(தி.மு.க.)8,24,526, சந்திரலேகா(ஜனதா) 3,87,401, எஸ்.எஸ். சந்திரன்(ம.தி.மு.க.)86,135.
சென்னை மாநகராட்சி தி.மு.க.வின் பொறுப்பிலே இருந்த போது தான், 1973-ம் ஆண்டு முதல்-அமைச்சசராக இருந்த நானே அதனைக் கலைப்பதாக பேரவையிலே அறிவித்தேன். அதே மாநகராட்சிக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மேயர் பொறுப்பையேற்றது.
தாய்மார்களுக்கு முதன் முதலாக உள்ளாட்சிகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது 1996-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலேதான். அதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் 44,143 பெண்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவி வகித்திடும் நிலை உருவானது.
1989-ல் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் தி.மு.க. ஆட்சியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசு வேலை வாய்ப்புகள் பெற வழி வகுக்கப்பட்டது.
1990-ல் தி.மு.க. ஆட்சியிலேதான் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கி, தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
சலுகைகள் வழங்கிடும் நலத்திட்ட உதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை தரும் பல திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தி.மு.க. ஆட்சியிலேதான், பெண்ணுரிமையைப் பறைசாற்றும் வகையில் இட ஒதுக்கீடு நிர்ணயம் செய்து, நிர்வாகத்திலும், உள்ளாட்சி மன்றப் பதவிகளிலும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுப் பெண்ணின் பெருமை போற்றப் பட்டது.
வரலாற்று உண்மைகள் இப்படியிருக்க, அ.தி.மு.க.வினர் எதைப் பேசினாலும் ஆமோதித்து அனுமதி அளித்திடும் பேரவைத் தலைவரை வசதியாக வைத்துக் கொண்டு, உலகம் பிறந்ததும் எங்களால்தான், நதிகள் ஓடுவதும் எங்களால்தான், நிலா காய்வதும் எங்களால்தான், நெருப்பு சுடுவதும் எங்களால்தான் என்று என்ன பேசுகிறோம் என்று புரிந்து கொள்ளாமல் எதையெதையோ பேசி வானத்திற்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.