கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவத்தில் வங்கி அதிகாரிகள்-போலீஸ் அதிகாரிககள் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் சம்மன் அனுப்ப உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் 16-ந் தேதி நடந்தது. வாக்குபதிவுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக மே 13-ந் தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் சமயத்தில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிடிப்பட்ட ரூ.570 கோடி பணம் யாருக்கு சொந்தமானது என்று தேர்தல் அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த பணம் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அந்த வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்குரிய உரிய ஆவணங்கள் இல்லை என்று முதலில் கூறப்பட்டது.
அதன்பின்னர் அது கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் வருமான வரித்துறையினருக்கு காட்டப்பட்டது. இதையடுத்து பணம் வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே ரூ.570 கோடி பணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிபதி சுப்பையா உத்தரவிட்டார். ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சி.பி.ஐ. தனது முதல் கட்ட விசாரணையை தொடங்கியது.
சி.பி.ஐ. முதல் கட்ட விசாரணையில் பணம் கொண்டு சென்று சிக்கிய கண்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள் போலியானவை என ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தது. மேலும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முதல் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்பூர் கலெக்டர் ஜெயந்தியை சந்தித்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு அளித்த போலீஸ் அதிகாரிகள் குறித்த தகவல்களையும், வருமான வரித்துறையின் அப்போதைய நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர். இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களையும், சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கலெக்டர் ஜெயந்தி ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக உதவி கலெக்டர் முருகேசன் பணியாற்றினார். இவர் தான் பணம் பிடிப்பட்டது குறித்து முதலில் விசாரணை நடத்தினார். எனவே அவர் நடத்திய விசாரணை மற்றும் தகவல்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். அந்த ஆவணங்கள் அனைத்தும் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
பணம் பறிமுதலில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் சம்மன் அனுப்ப உள்ளனர். அதையடுத்து அவர்களிடம் விசாரணை தொடங்க உள்ளனர். மேலும் இவ்வளவு பெரிய தொகையை அனுப்ப லாரி ஒப்பந்தம் செய்தபோது அவற்றின் ஆவணங்கள் பெற்று உண்மை தன்மையை அறியாதது ஏன்? லாரியை ஒப்பந்தம் செய்ய சிபாரிசு செய்த அதிகாரி யார்? பணம் பிடிப்பட்ட போது அது வங்கி பணம் தான் என உரிமை கொண்டாடிய அதிகாரிகள் யார்? என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் பட்டியலாக தயாரித்து வைத்துள்ளனர்.
எனவே சம்மன் அனுப்பி அவர்களிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையால் ரூ.570 கோடி பணம் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.