வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் நடைபெறும் என்றும், கலப்புப் பொறிமுறையென்றும், நிலைமாற்று நீதியென்றும், சிறி லங்கா அரசாங்கமே அனுசரணை வழங்கிக் கொண்டு வந்த ஐ.நா. தீர்மானத்தை அரசு நிறைவேற்றும் என்றும் கூறிய சர்வதேச சமூகத்தின் ஈழத்தமிழர்களுக்கான இன்றைய பதில் என்ன எனும் கருப்பொருளுக்கு அமைய நடைபெற்ற கருத்தரங்கில் தாயகத்தில் இருந்து வருகைதந்து கலந்துகொண்ட மனித உரிமைச் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் ஆகிய சின்னமணி கோகிலவாணி தனது கருத்தினைத் தெரிவிக்கையில்,உலகை ஏமாற்றும் நல்லாட்சி அரசின் போலிமுகத்தை கிழித்தெறிந்தார்.
சுவீடன் நாட்டைச் சார்ந்த பேராசிரியர் பீற்றர் சாக் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அன்றைய மஹிந்த அரசுக்கும் இன்றைய மைத்திரி ரணில் அரசுக்கும் எதுவிதமான வேறுபாடுமில்லை. ஆனால் அன்றைய அரசு வெளிப்படையாக அனைத்து அட்டூழியங்களையும் செய்தது.இன்றைய அரசோ இரகசியமாக அனைத்தையும் செய்து வருகின்றது. இன்றைய காலகட்டத்திலும் தமிழ் மக்களுக்கென எந்தவிதமான சாதகமான செயற்பாடுகளையும் அரசு செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இக் கருத்தரங்கில் நோர்வே நாட்டில் இருந்து வந்திருந்த சட்டத்தரணி சிவபாலன் அவர்கள் தெரிவிக்கையில்,
இலங்கையில் சட்ட ரீதியான பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதாகவும், அங்கு நியாயமான சட்ட ஒழுங்குகள் காணப்படாமையும் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
தென் ஆப்ரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த மனிதவுரிமை செயற்பாட்டாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியும் ஆகிய கிறிஸ்ரன் கொவண்டர் பேசுகையில், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட்டு ,உண்மையான நீதி அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அத்தோடு தமிழ் மக்களின் அபிலாசையை உள்ளடக்கியே அவர்களுக்கான தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என்றும் , இச் செயற்பாடுகளில் புலம்பெயர் மக்களின் பங்கு என்பது தவிர்க்கப்பட முடியாது என்பதையும் வலியுறுத்தினர்.
பசுமைத் தாயகத்தின் அனுசரணையுடன் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் திங்கள் கிழமை 20.06.2016 அன்று காலை 10:30 மணிக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஏற்பாட்டில் ஜெனிவா நகரில் ஊடக மாநாடு ஒன்றும் நடைபெறும். இம் மாநாட்டில் தாயகத்தில் இருந்தும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ஆகிய திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கலந்துகொள்கின்றார்.
ஊடக மாநாடு நடைபெறும் முகவரி :
Monday, June 20th 2016 at 10:30 am
« La Pastorale » Route de Ferney 106, Genève
(Bus 5 – Direction : Aéroport – Arrêt : Intercontinental)
அதே தினம் 20.06.2016 ஊடக மாநாட்டை தொடர்ந்து மதியம் 14:00 மணிக்கு ஐநா மன்றத்தை நோக்கிய மாபெரும் பேரணியும் நடைபெறும் .