பிரிவினைகள் மற்றும் சந்தேகங்களின்றி சமூகத்தில் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்வதனூடாகவே சமூக மற்றும் இன அடிப்படையிலான சகல பிரச்சினைகளுக்குமான தீர்வுகளைக் காணலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாத்தறையிலுள்ள விகாரையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வேற்றுமையை இல்லாதொழித்து அனைவரும் புரிந்துணர்வுடனும், நம்பிக்கையுடனும் செயற்படும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் பிரிவினைகளின்றி ஒன்றுபடவேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
உன்னதமான பிக்குகள் சமூகத்தின் கௌரவத்தையும், நன்மதிப்பையும் பாதுகாக்கும் வகையில் பிக்குகள் செயற்பட வேண்டும் என அவர் கோரியுள்;ளார்.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சில இளம் பிக்குமார்கள் நடந்துகொள்ளும் விதம் ஊடகங்களினூடாக உலகம் முழுவதும் காண்பிக்கப்படுவதனால் பிக்குகள் தொடர்பாக மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.