‘சம்பந்தன் மஹிந்தவுடன் சேர்ந்து பணியாற்றுவதென்பது ஆச்சரியமல்ல’-.கஜேந்திரன்

269 0

“படுகொலைக்கு துணை போன சம்பந்தன், படுகொலையை செய்த மஹிந்தவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதென்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் ஊடகம் ஒன்றிற்கு , நேற்று (09) தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள குரோதங்களை நீக்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

“சம்பந்தனைப் பொறுத்தவரையில், எப்போதுமே மஹிந்தவின் நட்புறவை அவர் பேணி வந்துள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக அவர் இருந்தாலும் கூட அவர் ஒருபோதும் நேர்மையாக இருந்தது கிடையாது. பேச்சுவார்த்தையின்போது விடுதலைப்புலிகள், சுய நிர்ணய உரிமை, தமிழ்த் தேசியத்தின் இறைமை அடிப்படையில் இடைக்காலத் தீர்வொன்றைப் பெற முயற்சியை மேற்கொண்டனர். எனினும், அந்த நிலைப்பாடுகளை கைவிட்டு, சம்பந்தன், வெறும் அதிகாரப் பகிர்வுக்கு தான் தயார் என இராஜதந்திர மட்டத்தில் தெரிவித்தார்.

அதன் காரணமாக, தமிழ் மக்கள் விரும்பித் தெரிவு செய்த தலைமை ஏற்றுக்கொள்கின்ற தீர்வே தமிழ் மக்களுக்கு தேவையானது எனவும் ஆயுத பலத்துடன் உள்ள விடுதலைப்புலிகள் கேட்பது ஒரு பிரிவினைவாதத்துக்கானது என்ற நியாயப்படுத்தலே என ராஜபக்ஷ சர்வதேச ரீதியில் தெரிவித்தார்.

இதனால், விடுதலைப்புலிகளை பயங்கரவாதமாகச் சித்தரித்து அவர்களை அழிப்பதற்கான போரை முன்னெடுக்கின்றபோது, அதற்கான இராணுவ, நிதி உதவிகளை சர்வதேசம் வழங்கியது. இதற்கு சம்பந்தன் முழு அளவில் ஒத்துழைத்தார்.

இதனால், விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டது மட்டுமல்ல பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இதற்கான நடவடிக்கைகளுக்கு சம்பந்தன் பரிபூரண ஒத்துழைப்பை வழங்கியவர்.

பொதுமக்கள் அழிக்கப்பட்டமைக்கு சம்பந்தனுக்கும் பங்கு உண்டு. மகிந்த ராஜபக்ஷவின் போர் வெற்றியில் சம்பந்தனுக்கும் பங்கு உண்டு. 2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவடைந்து அவர் நாடாளுமன்றத்துக்குச் சென்ற போது அவர் போரை முடிவுக்கு கொண்டு வந்தமைக்கு ராஜபக்ஷவை பாராட்டியிருந்தார்.

மக்களைக் கொலை செய்து, விடுதலைப்புலிகளை அழித்துப் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்ற ரீதியில், இராஜதந்திர ரீதியாக பாராட்டியிருந்தார். பல மக்கள் கொல்லப்பட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டு, நாம் கையாலாக நிலையில் இருந்த போது அவர் அவ்வாறு தான் பேசியிருந்தார். அப்போது மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையோ மக்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலோ அவர் பேசவில்லை.

விடுதலைப்புலிகளால் பாவ மன்னிப்புக் கொடுக்கப்பட்டு, 2001 தேர்தலில், புலிகளால் வெற்றிபெற்று நாடாளுமன்றப் பதவியை பெற்றுக் கொண்ட சம்பந்தன், புலிகளுக்கே துரோகம் செய்து, வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து, மக்கள் கொல்லப்பட்டமைக்கு துணை நின்ற ஒருவர், படுகொலைக்கு துணை போன ஒருவர், மஹிந்தவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதென்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல” எனத் தெரிவித்தார்.

Leave a comment