மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கடல்தறை அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இறால் பண்னை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவ சங்கங்கள் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.இது குறித்து நேற்று புதன்கிழமை பகல் மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வாகரை பிரதேச மீனவர் சங்கங்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது எதிர்ப்புக்களை பதிவுசெய்திருந்தனர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வாகரை மீனவர் சங்கத்தின் தலைவர் மு.சுப்ரமணியம் கருத்து தெரிவிக்கும் போது,நாங்கள் கைவிடப்பட்டதாக எண்ணியிருந்த வாகரை இறால் பண்னை அமைக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பத்திரிகைவாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த இறால் பண்னை அமைக்கும் தி;ட்டத்திற்கு மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.இது தவறான செய்தி.இதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.
இந்த இரால் பண்ணை அமைக்கப்படுவதனால் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொள்வர்.கண்டல் தாவரங்கள் பாதிக்கப்படுவதுடன் வீச்சுவலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொள்வார்கள்.இரால் பண்ணை நடாத்தும்போது அங்கு பாவிக்கப்படும் நச்சுபதார்த்தங்கள் உப்பாறில் கலக்கும் நிலையேற்படும்.இதன்காரணமாக இரால் முட்டைகள் அழிந்து இரால் பிடிப்பில் ஈடுபடுவோர் தொழில் இழக்கும் நிலையேற்படும்.அத்துடன் அந்த நஞ்சு தண்ணீர் ஏனைய இடங்களுக்கும் பரவி புல்பூண்டுகள் கூட முளைக்காத நிலையே ஏற்படும்.இதன் காரணமாக குறித்த பிரதேச மக்களாகிய நாங்கள் இதனை முழுமையாக எதிர்க்கின்றோம்.
வாகரை பிரதேச இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பினை கருத்தில்கொண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கவேண்டுமானால் அங்கு ஒரு ஆடைத்தொழிற்சாலையினை நிறுவமுடியும்.அதன் மூலம் வேலைவாய்ப்பினை எமது இளைஞர் யுவதிகள் பெற்றுக்கொள்ளமுடியும்.எமது பிரதேசத்தினை சேர்ந்த பல யுவதிகள் கொழும்பு போன்ற பல பகுதிகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்று பல்வேறு துர்ப்பாக்கிய நிலைக்கும் தளப்பட்டிருந்தனர்.இவ்வாறானவர்களை கருத்தில்கொண்டு பல்வேறு தொழிற்சாலைகளை இப்பிரதேசத்தில் ஆரம்பிக்கமுடியும்.
எனவே இந்த திட்டத்தின் வாகரை பிரதேச மீனவர்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தாக வெளியாகியுள்ள செய்தினை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம்.இந்த திட்டம் தொடர்பில் எங்களுடன் எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை.அந்த திட்டம் வந்தது தொடர்பில் எங்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.எங்களுக்காக குரல்கொடுக்க எந்த அரசியல்வாதியும் முன்வருவதில்லை.எங்களுக்கு ஓரு கட்சியுள்ளபோதிலும் எவரும் முன்வந்து இது தொடர்பில் குரல்கொடுப்பதாக தெரியவில்லை.
இந்த இரால் பண்ணையை உருவாக்கி அதன்மூலம் இங்குள்ள மக்களுக்கு போசாக்கான உணவினை வழங்குவோம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.இந்த ஊடக சந்திப்பில் வாகரை பிரதேசத்தினை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.