வடமாகாண சபையின் அமைச்சரவை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுப்பதற்கான நிலைமையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துள்ள தீர்க்கமான முடிவுகளே இதற்குக் காரணம் என தமிழரசுக்கட்சியினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.
பிடிவாதப் போக்குடனும், தமிழரசுக் கட்சிக்கு அமைச்சர் பதவியை வழங்குவதில் பழிவாங்கும் நோக்கத்துடன் முதலமைச்சர் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்ட தமிரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சரவையில் தாங்கள் எவரும் பதவி ஏற்பதில்லை என ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றனர்.
பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் பங்குபற்றாத ஓர் அமைச்சரவையை வைத்துக் கொண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடமாகாணசபையைக் கொண்டு நடத்துவதில் பல்வேறு தடைகளையும், இடையூறுகளையும் எதிர்நோக்க நேரிடும் என்றும், அதன் காரணமாக வடமாகாண சபை உரிய முறையில் செயற்பட முடியாமல் போக நேரிடும் என்றதோர் அச்ச நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.
நான்கு கட்சிகளைக் கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒரு கட்சி மாகாண சபையில் அமைச்சரவை பொறுப்புக்களைப் புறந்தள்ளிச் செயற்படுமேயானால், தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கில் கூட்டமைப்பு பிளவுபடுகின்ற ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதில் ஐயமில்லை.
முதலாவது விசாரணை நடவடிக்கைகள்
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்திருந்த நடவடிக்கைகள் முதலில் சபையில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்தக் குழப்பத்தையடுத்து. முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருந்தன.
முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தமிழரசுக் கட்சியினரால் ஆளுனரிடம் கையளிக்கப்பட்டதையடுத்து, வடமாகாணசபையே செயலிழந்து போகும் ஆபத்தை எட்டியிருந்தது. அதேவேளை, வடமாகாணசபையில் ஏற்பட்ட குழப்ப நிலையும், முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் அளவுக்கு மோசமடைந்தி;ருந்தது.
எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இருப்பையும், அதன் ஒற்றுமையையும் பேணி பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக கூட்டமைப்பில் ஏற்படவிருந்த உடைவு தவிர்க்கப்பட்டிருந்தது. இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சி மிகுந்த விட்டுக் கொடுப்புடன் நடந்து கொண்டதாகவே கருதப்பட்டாலும்கூட, நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதற்கு எதிராக மக்கள் எழுச்சி கொண்டதையடுத்து, தமிழரசுக் கட்சி தந்திரோபாய ரீதியில் பின்வாங்கிச் செயற்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் மீதும், ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதிலும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாணைகளில் கல்வி மற்றும் விவசாயத்திற்குப் பொறுப்பான இரண்டு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களே நிரூபணமாகியிருந்தன என்று விசாரணைக்குழு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து. முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அந்த அமைச்சர்கள் இருவரும் பதவி விலகினர்.ஆனால், ஏனைய சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்குப் பொறுப்பான இரண்டு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளின்போது, முறைப்பாட்டாளர்கள் சமூகமளிக்காத காரணத்தினால், விசாரணைக்குழு அந்தக் குற்றச்சாட்டுக்களைப் புறந்தள்ளியிருந்தது.
இரண்டாவது விசாரணைக்கான நடவடிக்கைகள்
விசாரணைகளின்போது முறைப்பாட்டாளர்கள் சமூகமளித்து, குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விபரங்களையும் ஆதாரங்களையும் முன்வைக்கத் தவறியிருந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு, விசாரணைக்குழுவினால் முடியாமல் போயிருந்தது.
ஆயினும் அந்த அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் முறைப்பாடு செய்தவர்களினால் மீளப் பெறப்படவுமில்லை. புறந்தள்ளப்படவுமில்லை. இதனால் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இருவரும் விசாரணைகள் முடியும் வரையில் விடுமுறையில் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று அறிவித்திருந்த முதலமைச்சர், அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
விசாரணைக்குழு புறந்தள்ளிய ஊழல் முறைப்பாடுகள் தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்திருந்த இரண்டு அமைச்சர்களும் விசாரணைகள் முடிவடையும் முன்பே, குற்றம் புரிந்தவர்கள் தண்டனை அனுபவிப்பதைப் போன்று கட்டாய விடுமுறையில் கடமையில் இருந்து ஒதுங்கியிருக்க முடியாது என மறுதலித்திருந்தனர்.
இரண்டாம் முறையாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்படுகின்ற விசாரணைக்குழுவானது, சட்ட வலுவுள்ளதாகவும், நடுநிலையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அத்தகையதொரு குழுவின் விசாரணைக்கு தாங்கள் ஒத்துழைப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தனர்.
திருப்தி இல்லை
அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கொழும்பில் சந்தித்து வடமாகாண சபையின் நிலைமைகள் குறித்து பேச்சுக்கள் நடத்தியிருந்தனர். இந்தச் சந்திப்பின் பின்னணியிலேயே இரண்டாவது விசாரணைக்குழுவானது, சட்ட வலுவுடைய நடுநிலையானதாக இருக்க வேண்டும் என்ற அமைச்சர்கள் இருவரினதும், முதலமைச்சருக்கான அறிவித்தல் வெளியாகியிருந்தது.
ஆயினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முதலமைச்சரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்பே முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைவாக யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரின் அழைப்பின் பேரில் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளினதும் தலைவர்களும் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் முதலமைச்சரின் தலைமையில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது மூன்று வ்pடயங்களில் உடன்பாடு எட்டப்பட்டிருந்த போதிலும், முதலமைச்சரின் செயற்பாடுகள், அணுகுமுறைகள் என்பவற்றில் தமிழரசுக்கட்சி திருப்தி அடையவில்லை.
முதலமைச்சருடனான சந்திப்பில் தமது கட்சி திருப்தி அடையவில்லை என்பதை அந்தச் சந்திப்பு தொடர்பான தகவல்களை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
‘அமைச்சர் பதவி விடயத்தை சர்ச்சைக்குரியதாக்க விரும்பவில்லை’
‘முதலமைச்சருடனான சந்திப்பு திருப்தியாக அமையவில்லை. வடக்கு மாகாண சபையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடாப்பிடியாக நிற்கின்றார். கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மேலாகவே, கூட்டத்தில் முதலமைச்சரின் செயற்பாடு அமைந்திருந்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டுவது போலவே, அவரது பேச்சுக்கள் இருந்தன. அமைச்சரவை மாற்றத்தின்போது, தமிழரசுக் கட்சியை முற்றாக ஓரம் கட்டுவதை எதிர்வு கூறுவதைப் போன்றே, அவரது பேச்சுக்கள் இருந்தன’ என மாவை சேனாதிராஜா முதலமைச்சருடனான சந்திப்பின் போது நடந்தவற்றை விபரிக்கும் போது கூறியுள்ளார்.
அத்துடன், கூட்டமைப்பில் உள்ள ஏனைய மூன்று கட்சிகளினதும் யோசனைகளை ஏற்றுக்கொள்கின்றார். ஆனால் தமிழரசுக்கட்சியின் யோசனைகளை மாத்திரம் ஏற்றுக்கொள்வதற்க அவர் தயாராக இல்லை என குறிப்பிட்ட அவர், அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே அந்தக் கட்சிகள் முதலமைச்சருக்கு ஆதரவளித்திருக்கின்றன. ஆனால் ‘அத்தகைய தேவை தமிழரசுக் கட்சிக்குக் கிடையாது. பதவிகளைக் குறிவைத்து நிலைப்பாடுகளை எடுப்பவர்கள் நாங்கள் அல்ல. அமைச்சர் பதவி விடயத்தை சர்ச்சைக்குரியதாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை’ என கூறியுள்ளார்.
‘வடக்கு மாகாண அமைச்சரவை மீளமாற்றியமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கைத் தமி;ழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் அமைச்சு பதவியை ஏற்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சராக உள்ள சத்தியலிங்கமும் பதவி விலகவுள்ளார்’ என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தகவல்களை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களே வெளியிட்டிருந்ததாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அமைச்சரவை நிலைமை
வடமாகாண அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கமும், போக்குவரத்துத் துறை அமைச்சர் டெனிஸ்வரனும் பிரச்சினைக்கு உரியவர்களாகக் காணப்படுகின்ற அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் எடுத்துள்ள முடிவுக்கமைவாக அமைச்சர் சத்தியலிங்கம் அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் டெனிஸ்வரனை டெலோ கட்சியினர் அந்த அமைச்சில் இருந்து அவரை நீக்குமாறு வடமாகாண முதலமைச்சரிடம் கோரியிருக்கின்றார்கள். எனவே, அவருக்குப் பதிலாகப் புதியவர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கின்றது.
சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதவியை இராஜிநாமா செய்தால் அவருடைய இடத்திற்குப் புதியவர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதேவேளை, முன்னர் நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து பதவி விலகிய அமைச்சர்களான ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகியோருக்குப் பதிலாக அனந்தி சசிதரனும், கந்தையா சர்வேஸ்வரனும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எது எப்படியாயினும், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கின்றார் என்பது கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது தெளிவாக வெளிப்பட்டிருக்கின்றது.
இத்தகைய சூழலில் அமைச்சரவை மாற்றத்தின்போது, இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை என முடிவு செய்துள்ள நிலையில் புதிதாக இரண்டு அமைச்சர்களை நியமிக்கும்போது அந்தக் கட்சியின் பிரதிநித்துவம் அமைச்சரவையில் இல்லாமல் போகக் கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், மாகாண அமைச்சரவையை சீராகச் செயற்படுத்துவதிலும் சபை நடவடிக்கைகளை சுமுகமாகக் கொண்டு செல்வதிலும் முதலமைச்சர் எதிர்வு கூற முடியாத சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
மனக்குறைகளும் குற்றச்சாட்டுக்களும்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டியதன் அவசியம் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழரசுக் கட்சியினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளனர். இப்போதும் அவர்களின் இந்த வலியுறுத்தல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை.
ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகத் திகழும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஏமனய பங்களரிக் கட்சிகளுடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே கூட்டபைமப்பின் வேட்பாளர்கள் அனைவரும் உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகளுக்கும், நாடாளுமன்றத்திற்குமான தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றனர். தேர்தல் காலங்களில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிடையே வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதில் தமிழரசுக் கட்சியினர் உடன்பாடுகளுக்கு அமைவாகச் செயற்படுவதில்லை. தமிழரசுக் கட்சிக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் பிரதிநிதிகள் தெரிவ செய்யப்படுவதை இலக்காகக் கொண்டே செயற்பட்டு வருகின்றார்கள் என்ற மனக்குறையும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய பங்காளிக்கட்சிகளிடம் காணப்படுகின்றது.
அதேவேளை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளிலும் இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்கள் மற்றும் அரச தலைவர்களுடனான சந்திப்புக்கள் பேச்சுவார்த்தைகள் என்பவற்றிலும் தமிழரசுக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கே முதன்மை இடம் அளிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அத்துடன், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேசிய முக்கியத்துவம் மிக்க விடயங்களில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான மனித உரிமைகள் நிலைமைகளில் அரசாங்கம் பொறுப்பு கூறும் விடயங்கள் சம்பந்தப்பட்ட தொடர்புகள் மற்றும் நகர்வுகள் என.பவற்றின் உண்மையான நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களின் நலன்கள் சார்ந்த செயற்பாடுகள் என்பன குறித்து, கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாகிய தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஏனைய பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுவதில்லை. உரிய தகவல்களைத் தெரிவிப்பதில்லை என்ற குறைபாடு முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது.
மொத்தத்தில் தமிழரசுக் கட்சி சார்ந்த, கூட்டமைப்பின் தலைவராகிய இரா.சம்பந்தன் அரசியல் சார்ந்த எல்லா விடயங்களிலும் அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடனும், அந்தக் கட்சியின் தலைவராகிய மாவை சேனாதிராஜாவுடனும் மாத்திரமே இணைந்து செயற்பட்டு வருகின்றார். டெலோ தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைவர்களுடன் நெருங்கிச் செயற்படுவதில்லை என்ற மனக்குறையும் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.
முக்கியமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பலமான அரசியல் கட்சியாக அல்லது அரசியல் கட்டமைப்பாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் தமிழரசுக் கட்சியின் சுயநலன் சார்ந்த ஒரு போக்கிலேயே கூட்டமைப்பின் தலைமை செயற்பட்டு வந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
மாகாண சபை தொடர்பிலான முரண் நிலை
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள், மனக்குறைகளின் பின்னணியில் இப்போது வடமாகாண சபையின் அமைச்சர் பதவிகளை பங்காளிக்கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வது என்று ஏற்கனவே மேற்கொண்ட உடன்பாட்டுக்கு மாறாகவே தமிழரசுக்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர் என்ற மனக்குறை சார்ந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களாலேயே மாகாண அமைச்சர்களின் ஊழல் செயற்பாடுகள் தொடர்பிலான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு, அவை தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதும் சபையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அந்த விசாரணைக்கு அமைவாக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் அமைச்சர்கள் மீது குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சார்ந்த அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு எதிராகவும், டெலோ கட்சியைச் சார்ந்த அமைச்சர் டெனிஸ்வரனுக்கு எதிராகவும் (அவர்கள் தொடர்பான விசாரணைகளின்போது அவர்கள் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பது போன்று) முதலமைச்சர் நிபந்தனை விதித்திருந்ததையடுத்து வடமாகாணசபையில் பூகம்பம் ஏற்பட்டிருந்தது.
தமிழரசுக் கட்சியின் விருப்பத்திற்கு அல்லது அதன் ஆலோசனைக்கு அமைவாக நடக்க மறுத்திருந்த ஒரு சூழலில் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லப் பிரேரணையை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்களே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் கொண்டு வந்திருந்தனர்.
முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்த்pல் கொண்டு வரப்பட்ட இந்தப் பிரேரணைக்கு தமி;ழரசுக்கட்சித் தலைமையின் ஆதரவும் ஆசீர்வாதமும் முழுமையாக இருந்தன. தமிழரசுக்கட்சியின் விருப்பத்திற்கு மாறாக அல்லது அந்தக் கட்சிக்கு எதிராகச் செயற்பட்டால் முதலமைச்சருக்குத் தகுந்த பாடம் படிப்பிக்கப்படும் என்ற தோரணையிலும் ஊடகங்கள் வழியாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இப்போது எழுந்துள்ள நெருக்கடியான சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் தமிழ் மக்களினதும் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டே, தமிழரசுக்கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சர் பதவியை ஏற்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவே வடமாகாண சபையின் செயற்பாடுகளைக் குழப்புவதற்கும், தமிழ் மக்களினதும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதாக மாறக்கூடிய நிலைமை உருவாகியிருக்கின்றது.
பிரச்சினைகளை திசை திருப்பும் சதி முயற்சி
தற்போது வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைக்குப் பின்னால் சதி முயற்சி இருப்பதாக தமிழரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கருத்துணர்வு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
முப்பது வருடங்களாக மோசமான யுத்தச் சூழலில் சிக்கி பல்வேறு துன்பங்களையும் கஸ்டங்களையும் உயிரிழப்புக்கள் சொத்து இழப்புக்களையும் சந்தித்து முறையான மறுவாழ்வு ஒன்றை உருவாக்க முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்ற வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகி;ன்றார்கள்.
இராணுவத்தின் காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், யத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலைமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது போன்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சார்ந்திருக்கின்றது.
எல்லாவற்றையும்விட அதிமுக்கியமாக புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாகச் செயற்பட வேண்டிய தேவையும் அவர்களையே சார்ந்திருக்கின்றது. இத்தகைய ஒரு நிலையில், வடமாகாண சபையின் அமைச்சரவையில் யார் யார் இருப்பது என்பதும், யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் என்பவற்றுடன் சமூகவிரோதச் செயற்பாடுகள் சார்ந்த குற்றச் செயல்களுமே தமிழ் மக்களினதும், தமிழ் அரசியல் பிர்சசினைகளினதும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது என்று வெளிப்படுத்தும் வகையிலான நிலைமை ஒரு சதி முயற்சியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது என தாங்கள் உணர்ந்திருப்பதாக தமிழரசுக்கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்களுடைய கூட்டத்தில் கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதே கருத்தை வடமாகாணசபையின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசனும் வெளியிட்டிருக்கின்றார்.
அடுத்தது என்ன……?
ஆயினும் வடமாகாண சபை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் முற்றுமுழுதாக கூட்டமைப்பின் தலைமைக்கட்சி என்ற ரீதியில் தமிழரசுக்கட்சியின் விருப்பங்கள் தீர்மானங்களுக்கு அமைவாகவே ஏனைய கட்சிகளைச் சார்ந்தவர்கள் செயற்பட வேண்டும் என்ற கட்சி நலன் சார்ந்த போக்கின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கின்றன.
மாகாண அமைச்சு பதவியை முக்கியப்படுத்தி ஒரு சர்ச்சையையும் பிரச்சினையையும் உருவாக்க விரும்பவில்லை என்று இப்போது கருத்து வெளியிட்ட தமிழரசக் கட்சியினரே, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரiணையைக் கொண்டு வந்து வடமாகாண சபையில் மோசமான ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியிருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் ஏனைய மூன்று பங்காளிக்கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையையடுத்தே, தமிழரசுக்கட்சி முதலமைச்சரைப் பதவியிறக்கம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்திருந்தது.
தன்னிகரில்லாத தலைமை நிலையில் தனது போக்கிற்கு அமைவாக – ஏனைய கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டைக் கவனத்தி;ல் எடுக்காத வகையில் செயற்பட்டு வந்த தமிழரசுக் கட்சிக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது ஏனைய கட்சிகள் முன்னெடுத்திருந்த நடவடிக்கை அதிர்ச்சி வைத்தியமாகவே அமைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் என்ற விடயத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் காட்டிய உறுதியான நிலைப்பாடு இண்டாவது தடவையாகத் தமிழரசுக்கட்சியை உலுப்பியிருக்கின்றது.
இதன் விளைவாக அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற அந்தக் கட்சியின் தீர்மானம் வடமாகாண சபையிலும், தமிழ் மக்களுடைய அரசியல் முகமாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டிலும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன என்பதை உடனடியாக அனுமானிக்க முடியாதுள்ளது.