படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை மீட்டு புதுக்கோட்டை மீனவர்கள் கரை சேர்த்தனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை (8-ந்தேதி) கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் மெகராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் உச்சிப்புளியை சேர்ந்த வேல்முருகன், முனியாண்டி, சுந்தரம், மாரி ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்தநிலையில் அவர்களுடன் சென்ற மீனவர்கள் செவ்வாய்க்கிழமை (9-ந்தேதி) மீன்களுடன் ஒருவர்பின் ஒருவராக கரைக்கு திரும்பினர். மெகராஜூக்கு சொந்தமான படகில் சென்ற 4 மீனவர்கள் மட்டும் கரை திரும்பவில்லை.
இதனால் படகின் உரிமையாளர் மெகராஜ், மீன்துறை அலுவலகத்தில் தகவல் தெரிவித்து விட்டு மற்றொரு படகில் வேறு சில மீனவர்களுடன் மாயமான படகை தேடி சென்றார். மேலும் கடலோர காவல் படை, கப்பற்படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ராமையாவிற்கு சொந்தமான விசை படகில் சென்ற ராம்திலீப், ராபின் உள்ளிட்டோர் ஆள் கடலில் மாலை 6 மணி அளவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே திசையில் சற்று தூரத்தில் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்ற கூக்குரல் கேட்டது.
இதைக்கேட்ட மீனவர்கள் தங்கள் படகை அங்கு செலுத்தினர். அருகில் சென்று பார்த்த போது மாயமான மண்டபம் மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்த போது தங்களின் விசை படகு பழுதாகி கடந்த 3 நாட்களாக கடலில் தத்தளித்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. மீனவர்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஜெகதாபட்டினம் மீனவர்கள் தங்கள் விசைப்படகில் மண்டபம் மீனவர்களின் விசைப்படகை கட்டி இழுத்து வந்தனர். இந்த படகு இன்று அதிகாலை 6 மணிக்கு ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தது.இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.