தென் ஆப்பிரிக்காவில் நீதிமன்ற உத்தரவை மீறி சுமார் 15 ஆயிரம் மின் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.தென் ஆப்ரிக்காவின் அரசு மின் நிறுவனமான எஸ்காம் கட்டுப்பாட்டில் ஏராளமான மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
மிகக் குறைந்த சம்பளம் வாங்குவோருக்கு 10 சதவீத ஊதிய உயர்வும், அதிக சம்பளம் வாங்குவோருக்கு 8.5 சதவீத ஊதிய உயர்வும், வீட்டு வாடகைப்படியாக 3000 ரேண்ட் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆனால், எஸ்காம் தரப்பில் 7 முதல் 9 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க முன்வந்தது.
இதனை ஏற்காத தேசிய சுரங்கத் தொழிலாளர் யூனியன், நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்காமின் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு உள்ள, தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தை சட்ட விரோதமானது என்று கூறியுள்ள எஸ்காம், ஸ்டிரைக் காரணமாக நிறுவனத்தின் செயல்பாடுகள் இதுவரை பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.