தந்தையின் இதயத்தை தானம் பெற்றவரை தனது திருமணத்திற்கு அழைத்து ஆசி பெற்ற பெண்

310 0

201608101838541326_Bride-calls-her-father-s-heart-recipient-for-her-marriage_SECVPFஅமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தன் தந்தையின் இதயத்தை பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் முதியவரை தனது திருமணத்திற்கு வரவழைத்து ஆசி பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஜெனி ஸ்டீபன்(33) என்ற பெண் துவக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அப்போது, இறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் தனது தந்தை மைக்கேல் ஸ்டீபனின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பினார்.

அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெனி ஸ்டீபனின் தந்தை கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த துயரத்திற்கு மத்தியிலும் ஸ்டீபனின் உடல் உறுப்புக்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்திருந்தனர். அவரது இதயம் நியூ ஜெர்சியைச் சேர்ந்த தாமஸ் என்பவருக்கு பொருத்தப்பட்டது. மாற்று அறுவை சிகிச்சை மூலம் தந்தையின் இதயத்தைப் பெற்று உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் 72 வயதுடைய தாமசை தனது திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார் ஜெனி.

இதுதொடர்பாக 2 மாதங்களுக்கு முன் தாமசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனது தந்தையின் ஸ்தானத்தில் இருந்து நீங்கள் எனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என உருக்கமாக கூறியிருந்தார்.

அந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்ற தாமஸ், ஜெனியின் திருமணத்திற்கு சென்றார். இருவரும் சந்தித்தபோது ஒருவரையொருவர் கட்டித்தழுவி ஆனந்தமடைந்தனர். தாமஸ், ஜெனியின் கையை தனது இதயத்தில் வைத்து, அவளுக்கு முத்தம் கொடுத்தார். பிறகு அவளை மணமகன் பால் மானிர் கையில் ஒப்படைத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தந்தையின் இதயம் தன்னை வாழ்த்தியதால் மகிழ்ச்சியடைந்த ஜெனி, தாமஸின் கையை பிடித்து நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து தாமஸ் கூறுகையில், ‘ஜெனி எனக்கு 2 மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தில், உங்களுக்கு உள்ளிருக்கும் இதயத்தை அளித்தவரின் மகள் தான் நான். எனக்கு நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு நீங்களும் உங்களுடைய மனைவி நான்சியும் வந்து என்னை வாழ்த்தினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று எழுதியிருந்தாள்.

அவள் தனது தந்தையின் ஆசிர்வாதம் வேண்டுமென்று எழுதியிருந்த கடிதத்தை கண்டு நான் மனம் நெகிழ்ந்ததுடன், நான் ஜெனியை மகிழ்ச்சியில் கட்டித் தழுவி வாழ்த்தினேன். ஜெனி எனது நாடித்துடிப்பை கண்டு மகிழ்ச்சியடைந்ததுடன், எனது இதயத்தின் மீது கைவைத்துக்கொண்டாள். இது ஒரு அழகான நெகிழ்ச்சியான தருணம்.’ என்றார்.