ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

246 0

201608110900525108_Harvard-University-the-seat-of-Tamil-Maharashtra-Tamils_SECVPFஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு மராட்டிய மாநில தமிழர்கள் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும் கணிசமான நிதி திரட்டவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு அந்த இருக்கை இதுவரை அமையப் பெறவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய கல்வித்துறையின் ஓர் அங்கமாக சங்கத்தமிழ் இருக்கை ஒன்றினை நிறுவுவதற்கான முயற்சியில் அமெரிக்காவில் வாழும் டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய இருவரும் இறங்கியுள்ளனர்.

இந்த அனுமதி பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவை. இதில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய 2 பேரும் வழங்கியுள்ளனர். மீதமுள்ள ரூ.33 கோடிக்கு அதிகமான நிதியை உலக தமிழர்களிடம் நன்கொடையாக திரட்டி வருகின்றனர்.

அந்த முயற்சிக்கு உதவிடும் வகையில் மும்பையில் உள்ள தமிழ் ஆர்வமிக்க அரசு அதிகாரிகள், தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள், தமிழ் ஆர்வலர்கள் அடங்கிய குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள அம்பாசிடர் விடுதியில் நடைபெற்றது. இதில் மராட்டிய மாநில ஒருங்கிணைப்பாளராக மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் பொன்.அன்பழகன் பொறுப்பேற்றார்.

கூட்டம் நடைபெற்ற முதல் நாளிலேயே ரூ.25 லட்சம் நன்கொடையாக திரட்டப்பட்டது. மேலும் ஆர்வமுள்ள தமிழர்கள் பலரை அணுகி கணிசமான தொகையை திரட்டி மராட்டிய மாநில தமிழர்கள் சார்பாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த முயற்சிக்கு முன்னாள் காவல்துறை தலைவர் டி.சிவானந்தம், ரவீந்திரன், சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன், தி.சிங்காரவேலு, நாசிக் கலெக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ந.ராமசாமி உள்ளிட்ட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் எம்.ராஜன், பொருளாதார குற்றத்துறை துணை போலீஸ் கமிஷனர் ஜெயக்குமார், மும்பை துணை போலீஸ் கண்காணிப்பு கமிஷனர் அம்பிகா, வருமான வரித்துறை துணை கமிஷனர் வி.எஸ்.பாண்டியன், சுங்க வரித்துறை கமிஷனர் விமலநாதன், இந்திய அரசின் அணுசக்தித்துறை துணைச்செயலர் மெர்வின் அலெக்சாண்டர், மும்பை தமிழ் சங்க தலைவர் ஆர்.கண்ணன், மராட்டிய மாநில தமிழ்ச்சங்க தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.