நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை ஒரு பொது வேட்பாளராக நிறுத்தி, நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது, மக்களின் எதிர்பார்ப்புகளை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கே ஆகும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் நிலவி வந்த சுதந்திரமற்ற நிலை தற்பொழுது இல்லை எனவும், மக்கள் சுதந்திரமாகவே செயல்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை உருவாக்கியது நல்லாட்சி அரசாங்கமே எனவும், பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
இன்று ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் தீர்மானிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்படுகின்றது. கடந்த காலத்தில் நமது நாட்டில் முன்னெடுக்கப்பட்ட, திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களுக்கு அதிகளவு பணங்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் உமாஓயா பல்நோக்கு திட்டம், ஹாம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி என, மேற்கொள்ளப்பட்டமைக்கு அதிக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. உமாஓயா திட்டத்திற்கு என 135 பில்லியனும், ஹாம்பாந்தோட்டைக்கு என 46 பில்லியனுமாக, 181 பில்லியன் நாட்டின் வருவாயிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.
இந்த பணம் இன்று இருந்திருந்தால் அபிவிருத்தி ஒரு அளவில் முன்னேற்றமடைந்திருக்கும்.
அத்தோடு மலையக மக்களுக்கும் வீடுகள் பல அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் ஒன்றரை வருடமாக பேசப்பட்டு வருகின்ற கல்வி கலாச்சாலைகளும் பூர்த்தியாகியிருந்திருக்கும்.
இந்த வகையில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் மலையக மக்களுக்கு பத்தாயிரம் வீடுகளை தந்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன், என்றார்.