புதிய அரசியல் சாசனம் வெற்றியளிக்க உதவ வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் புலம்பெயர் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13வது உலக தமிழராராச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று (06) யாழில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 1974ம் ஆண்டு உலகத் தமிழராச்சி மாநாடு பரபரப்பான சூழலில் நடைபெற்றது. தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று அன்றைய மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்பின்னர் 1977ம் ஆண்டு தமிழ் பண்பாட்டு மாநாடு முதன்முதலாக தமிழகத்தில் நடைபெற்றது.
நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் ஒரு குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். பாரம்பரிய பொக்கிஷத்திற்கு உரித்தானவர்கள் அவற்றினைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. இலங்கையில் வாழும் தமிழர்கள் பல்வேறு கஸ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
50 வீதமான மக்கள் இங்கு வாழவில்லை. ஏறக்குறைய 15 இலட்சம் மக்கள் உலகத்தில் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். கலவரங்களின் காரணமாகவும், தாக்கப்பட்டதன் காரணமாகவும், தமது சொந்த பிரதேசங்களில் வாழ அவர்களால் முடியாதுள்ளது.
தற்போது இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று புதிய பாதையில் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். புதிய அரசியல் சாசனத்தினை உருவாக்கி அதன் மூலம் சமத்துவமும் சமாதானமும் ஏற்படுத்தப்படவுள்ளன.
அரசியல் சாசனம் வெற்றி பெற வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து, சுயகௌரவத்துடன், சுய அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழக்கூடிய வகையில், அந்த இலக்கை அடைய வேண்டிய கடமை எமது அனைவருக்கும் உரியது. நாங்கள் அனைவரும் தமிழர்கள். அநீதியாக எதையும் கேட்கக் கூடாது. நீதியாக, நீதியின் அடிப்படையில் உரிமையின் அடிப்படையில் பெற வேண்டியவற்றினைப் பெற வேண்டும்.
இந்த மாநாடுகள் தொடர்ந்தும் நடைபெற வேண்டும். எம் மத்தியில் உள்ள ஒற்றுமை பலமடைய வேண்டும். எமது இனம் உலகத்தில் ஒரு மிகவும் கௌரவமான இடத்தினை அடைந்துள்ளது. அவற்றினைப் பாதுகாக்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். வளர்க்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.