உயர் தரப் பரீட்சைக்கான சகல எற்பாடுகளும் பூர்த்தி; பாரீட்சார்த்திகளுக்கான அறிவுரைகள்

255 0

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்திய செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. 

உயர் தரப் பரீட்சை எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன், நெடுந்தீவு, ஊர்காவற்துறை மற்றும் நைனாதீவு உட்பட நாடு பூராகவும் 2230 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ. எம். என். ஜே. புஷ்பகுமார கூறினார்.

இம்முறை விஷேட தேவையுடைய 260 பரீட்சார்த்திகள் உட்பட 03 இலட்சத்து 15,227 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், பரீட்சை மேற்பார்வை நடவடிக்கைக்காக 28,000 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பரீட்சை தினமும் காலை 08.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளதால் அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதிப் பத்திரத்துடன் தமது ஆள் அடையாள அட்டைகளுடன் காலை 08.00 மணிக்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

எந்தவொரு பரீட்சார்த்தியாவது ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், கைத்தொலைபேசிகள் அல்லது இலத்திரனியல் உபகரணங்களை பயன்படுத்தி பரீட்சை முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பரீட்சைகள் ஆணையாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற எந்தவொரு பரீட்சைக்கும் 05 ஆண்டுகளுக்கு தோற்ற முடியாத நிலை ஏற்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ. எம். என். ஜே. புஷ்பகுமார கூறினார்.

அதேவேளை பரீட்சை நிலையங்களில் முறைகேடுகள் அல்லது மோசடிகள் இடம்பெற்றால் அது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

Leave a comment