3 கோரிக்கைகளையும் வலியுறுத்தி பா. ஜனதா இளைஞரணி சார்பில் வருகிற 7-ந்தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று இளைஞர் அணி தலைவர் வினோஜ்செல்வம் தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் ப.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அளவில் கல்வியில் தமிழகம் 14-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 37141 அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 23 ஆயிரம் ஆகும். கடந்த 2008-09ல் அரசு தொடக்கப்பள்ளிகளில் 43.67 லட்சம் மாணவர்கள் படித்தனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிந்து 2012-13ம் ஆண்டில் 36.58 லட்சமானது. அதேபோன்று நடுநிலைப்பள்ளிகளில் 50.46 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 45.3 லட்சமாக குறைந்துள்ளது.
இதற்கு காரணம் அரசு பள்ளிகளின் தரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதுதான். பெற்றோர்களை தனியார் பள்ளிகளை நோக்கி செல்ல வைத்துள்ளது. அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை. 1,442 அரசு பெண்கள் பள்ளிகளிலும், 4,278 அரசு ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி கூட இல்லை.
இது ஒருபுறம் இருக்க ஆசிரியர்களின் எண்ணிக்கை இதைவிட மோசமாக உள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான அரசு பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதமே உள்ளனர். அவர்களால் எப்படி அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்த முடியும்? எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் கல்வி தரம் உயர்த்தப்படவே இல்லை.
இப்படிப்பட்ட காரணங்களால்தான் கல்வியில் தமிழகம் 14-வது இடத்தில் உள்ளது. எனவே தமிழ ககல்வி தரத்தை உயர்த்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மதுக்கடைகளை உடனே மூட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
இந்த 3 கோரிக்கைகளையும் வலியுறுத்தி பாரதீய ஜனதா இளைஞரணி சார்பில் வருகிற 7-ந்தேதி கோட் டையை நோக்கி பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் நடக்கிறது.
பேரணிக்கு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவ் மற்றும் அகில இந்திய இளைஞரணி தலைவர் பூனம் மகாஜன் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். பேரணியில் பல்லாயிரக்கணக்கான பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.