தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு முகவரி நீக்கப்பட்டது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர்கள், ஆதாரத்துடன் கமல் பேச வேண்டும் என சவால் விடுத்தனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, ஊழல் புகார்களை அமைச்சர்களின் இ-மெயில் முகவரிக்கே அனுப்பும்படி கமல் கேட்டுக்கொண்டார். அத்துடன், அமைச்சர்களின் தொலைபேசி மற்றும் இ-மெயில் முகவரிகளையும் வெளியிட்டார்.
இந்த செய்தி வைரலாகப் பரவிய நிலையில், அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் தொலைபேசி மற்றும் இ-மெயில் முகவரிகள் நீக்கப்பட்டு விட்டது.இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. இதனால் அமைச்சர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என எனது தொகுதியைச் சேர்ந்தவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்த தகவலைகளை மறைத்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சட்டவிரோதம் ஆகும்’ என கூறியுள்ளார். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.