ருவாண்டா தேர்தலில் அபார வெற்றி: பால் ககாமி 3-வது முறையாக அதிபர் ஆனார்

280 0

ருவாண்டா நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பால் ககாமி 98 சதவீத வாக்குகளை பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் ஆகியுள்ளார்.

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் பால் ககாமி 98 சதவீத ஓட்டுகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றார். அதுவும் தொடர்ந்து 3-வது முறையாக அவர் அதிபர் ஆகியுள்ளார்.அவரை எதிர்த்து இந்த தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கிரின் கட்சி வேட்பாளர் பிராங்க் ஹபினேசாவும், சுயேச்சை வேட்பாளர் பிலிப்பி மபயிமனாவும் படுதோல்வி அடைந்தனர்.

இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மற்றொரு சுயேச்சை வேட்பாளரும், தொழில் அதிபருமான டயானா ஷிமா ரிவிகராவை தேர்தல் கமிஷன் தகுதி இழப்பு செய்துவிட்டது.

இந்த தேர்தலுக்கு முன்னதாக பால் ககாமி அதிபர் தேர்தல் பற்றி குறிப்பிடுகையில், “அதிபர் தேர்தல் வெறும் சம்பிரதாயம் மட்டுமே” என கூறியது குறிப்பிடத்தக்கது.இந்த தேர்தல் முடிவு குறித்து பால் ககாமி ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “தலைவர் பால் ககாமி நாட்டில் நிலைத்தன்மை, பொருளாதார முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளார்” என கூறினர். தேர்தல் வெற்றிக்கு பின்னர் பால் ககாமி நாட்டு மக்களுக்கு டி.வி.யில் உரை ஆற்றினார்.

அப்போது அவர், “ருவாண்டா மக்களின் பிரச்சினைகளை மேலும் 7 ஆண்டுகளுக்கு கவனிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்ட உண்மையான ருவாண்டா மக்கள் ஆவோம் என உறுதி அளிக்கிறேன்” என கூறினார்.பால் ககாமி, 17 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment