பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இந்து மதத்தை சேர்ந்தவர் யாரும் மந்திரி பதவி வகிக்கவில்லை. இந்நிலையில் இந்து மதத்தை சேர்ந்த தர்ஷன் லால் மந்திரி ஆக பதவி ஏற்றுள்ளார்.
பாகிஸ்தானில் பனாமா கேட் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பதவி இழந்தார். அதை தொடர்ந்து அவரது மந்திரி சபை கலைக்கப்பட்டது.
பின்னர் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாசி (58). தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார். இவர் நவாஸ்செரீப்பின் தீவிர ஆதரவாளர் ஆவார். அவரது அமைச்சரவையில் பெட்ரோலிய துறை மந்திரி ஆக இருந்தார்.
இந்த நிலையில் அவர் தனது தலைமையிலான அரசில் புதிய மந்திரிகளை நியமனம் செய்தார். முன்னதாக அது குறித்து நவாஸ் செரீப்புடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் புதிய மந்திரிகள் பட்டியல் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 47 மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 பேர் கேபினட் அந்தஸ்து பெற்றவர்கள். 19 பேர் ராஜாங்க மந்திரிகள் ஆவர்.
இது நவாஸ்செரீப் அரசை விட 2 மடங்கு அதிகம் ஆகும். புதிய மந்திரி சபையில் முன்னாள் ராணுவ மந்திரி கவாஜா முகமது ஆசிப் வெளியுறவு துறை மந்திரி ஆனார். 2013-ம் ஆண்டு நவாஸ் செரீப் அரசில் வெளியுறவு துறைக்கு மந்திரி நியமிக்கப்படவில்லை. இறுதியாக ஹினாரப்பானிகர் என்ற பெண் வெளியுறவு துறை மந்திரியாக இருந்தார்.
அதே போன்று இந்த மந்திரி சபையில் முக்கிய நிகழ்வும் நடந்துள்ளது. இந்து மதத்தை சேர்ந்த தர்ஷன் லால் மந்திரி ஆக பதவி ஏற்றார். இவருக்கு மாகாணங்கள் ஒருங்கிணைப்பு துறை ஒதுக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இந்து மதத்தை சேர்ந்தவர் யாரும் மந்திரி பதவி வகிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இவருக்கு அப்பாசி பதவி வழங்கியுள்ளார்.
சிந்து மாகாணத்தை சேர்ந்த இவர் டாக்டர் ஆவார். மிர்பூர் நீலோநகரில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் சார்பில் போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றி பெற்றார். இவர் மைனாரிட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்டார். மேலும் முன்னாள் திட்டத்துறை மந்திரி அசன் இக்பால் உள்துறை மந்திரியாகவும், இஷாக்தர் நிதி மந்திரி ஆகவும், குர்ரம் தஸ்தகீர் ராணுவ மந்திரி ஆகவும் பொறுப்பேற்கின்றனர்.