இராமேஸ்வரம் மீனவரான பிரிட்ஜோ கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை 6 மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என மேல்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இராமநாதபுரம் ஆர்.ஆர். சேதுபதி நகரைச் சேர்ந்த ராஜு என்பவர் மேல்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்ததார்.
அதில், இந்திய கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள்; மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது.
எனினும், இதை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில், மத்திய அரசாங்கத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி,
தமிழக மீனவர் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்த கடற்பகுதி எது என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை.
மாநில அரசே அது குறித்து கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாநில அரசுத் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, இது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விசாரணைகளை 6 மாதங்களில் நிறைவுசெய்து, இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.