உமா ஓய திட்டம் – நோர்வே நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் 

449 0
சிறந்த முழுமையான ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் உமா ஓய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
உமா ஓய அபிவிருத்தி திட்டம் தொடர்பான தமது இடைக்கால அறிக்கையை நோர்வே நிபுணர் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தது.
இதன்போது குறித்த விடயத்தை நிபுணர் குழு குறிப்பிட்டதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள்  சுரங்கச் சுவர்களை பலப்படுத்தி பலமான மூலப்பொருட்களைக் கொண்டு முத்திரையிடுவதற்கான இயலுமையைக் கொண்டிருக்கவில்லை என நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தில் பாரிய அளவில் நீர் உட்புகுவதை எதிர்கொள்வதற்கு ஒப்பதந்தக்காரர்கள் தயாராக இருக்கவில்லை என்று நிபுணர் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு சிறந்த முழுமையான ஆரம்பகட்ட ஆய்வு செய்யப்பட்டிருக்குமானால் சுரங்கத்தில் நீர் உட்புகுவதை தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுரங்கத்தின் எஞ்சிய நான்கரை கிலோ மீற்றர் பகுதி பணிகளை மேற்கொள்ள முன்னர் விசேடமான சாந்து மூலப்பொருட்களையும் இயந்திரங்களையும் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்று நிபுணர் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், நீர் கசிவை எப்படி முழுமையாக நிறுத்த முடியும் என்பது குறித்தும் முன்னைய அறிக்கைகளில் நீர் கசிவு கவனத்திற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் குறித்தும் ஒரு முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிபுணர்களிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுபோன்ற பாரிய கருத்திட்டங்கள் முறையான ஆய்வுகளின்றி மேற்கொள்ளப்படக்கூடாது என்றும், எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை தவிர்ப்பதற்கு உமா ஓய திட்டத்தின் பிரச்சினைகள் பாடமாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்

Leave a comment