ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் நேட்டோ படை வீரர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 6 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரக்கூடிய தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் உள்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை உறுதுணையாக இருந்து வருகிறது. இதனால் தலீபான் பயங்கரவாதிகள் நேட்டோ படையினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காபூல் நகரில், குராபக் மாவட்டத்தில் ஆப்கான் ராணுவ வீரர்களுடன் இணைந்து நேட்டோ படை வீரர்கள் ரோந்து அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பெண் போன்று உடை அணிந்து வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.
இந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நேட்டோ படை வீரர் ஒருவரும், அப்பாவி மக்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 6 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.