லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளை நிறுவி மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் அரசியல் கட்சி துவங்கியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
லஷ்கர்–இ–தொய்பா, ஜமாத்–உத்–தவா என்ற பெயர்களில் அமைப்புகளை நிறுவி, பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர் ஹபீஸ் சயீத். மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நடந்த தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட இவனை இந்தியா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவும் ஹபீஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் அமெரிக்க டாலர் விலையும் நிர்ணையித்துள்ளது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சி அமைந்த பின்னர், இந்தியாவின் நெருக்கடிக்கு அஞ்சிய பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய கூட்டளிகளை வீட்டுக்காவலில் வைத்து உள்ளது.
பாகிஸ்தான் அரசியலில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அந்நாட்டு அரசு அமைப்புக்கு எதிராக தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவனது வீட்டுக்காவல் செப்டம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ளநிலையில் அவன் பாகிஸ்தானில் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளான்.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் அவனுடைய கட்சி பதியப்பட்டு உள்ளது. பயங்கரவாத இயக்கமான ஜமாத் உத் தவா இயக்கத்தை மில்லி முஸ்லீம் லீக் பாகிஸ்தான் என அரசியல் கட்சியாக்கி உள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு அந்நாட்டு ராணுவம் மற்றும் உளவு அமைப்பு உதவியாக உள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அரசியல் கட்சி தொடங்கியது தொடர்பாக இந்தியா கடும் விமர்சனம் செய்து உள்ளது. பயங்கரவாதி ஹபீஸ் சயீத் இரத்தம் படிந்த கைகளை வாக்கு மையால் மறைக்க பார்க்கிறார் என தெரிவித்து உள்ளது.