அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு பற்றிய விசாரணையை உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் நடத்தி வந்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு பற்றிய விசாரணையை உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் நடத்தி வருகிறார். இவர், நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றவர்.
இப்போது இவர் விசாரணையில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை, புதிய திருப்பமாக அமெரிக்க அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அது, ரஷிய தலையீடு தொடர்பான விவகாரத்தில் முல்லர், கிராண்ட் ஜூரி என்று அழைக்கப்படுகிற பெருநடுவர் குழுவை பயன்படுத்துவதாகும். இது டிரம்ப் பிரசாரக் குழுவுடன் சாத்தியமான (ரஷியாவின்) கூட்டணியைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதில், ஒரு ஆக்ரோஷமான அணுகுமுறையை முல்லர் எடுத்துக்கொள்வார் என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது என சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சாட்சியம் அளிப்பதற்கு மக்களை தூண்டுவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க பெரு நடுவர்கள் குழு பயன்படுத்தப்படுவது உண்டு என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்காவில் பெரு நடுவர்கள்குழு, பொதுமக்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, சாட்சியங்களை ரகசியமாக கேட்டு பதிவு செய்வது வழக்கம்.
பெரு நடுவர் குழுவை மில்லர் பயன்படுத்துவது பற்றி சி.என்.என். கருத்து தெரிவிக்கையில், “சாத்தியமாகக்கூடிய நிதி குற்றங்கள் குறித்து தனது விசாரணை வளையத்தை முல்லர் இதன் மூலம் விரிவுபடுத்தி உள்ளார்” என கூறி உள்ளது.
ரஷிய விவகாரத்தில் பெரு நடுவர்கள் குழு பயன்படுத்தப்படுவது பற்றி அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு சட்ட ஆலோசகர் டி காப் கருத்து கூறும்போது, “பெருநடுவர் குழு விவகாரங்கள், ரகசியமானவை. முல்லருக்கு வெள்ளை மாளிகை முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.