சென்னை ஐகோர்ட்டு ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை

257 0

சென்னை ஐகோர்ட்டு ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் 9 வக்கீல்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் 9-வது நாளை எட்டியிருக்கிறது. அவர்களில் இரு வக்கீல்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனாலும் கோரிக்கைகள் ஏற்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

4 மாநிலங்களின் ஐகோர்ட்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள போது, சென்னை ஐகோர்ட்டின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிப்பதில் என்ன சிக்கல் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

அதே நேரத்தில் தமிழை ஐகோர்ட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்கும் விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை என்பதையும் மறுக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதையும், கோரிக்கை மனு கொடுத்ததையும் தவிர தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.

தமிழை ஐகோர்ட்டு ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மதுரை வக்கீல்களின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தமிழை ஐகோர்ட்டு ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment