எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை அகற்ற வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., கடந்த 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அங்கு தமிழக அரசு சார்பில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது எம்.ஜி.ஆரின் நினைவிடம் சேதம் அடைந்தது.
அதனை தொடர்ந்து ரூ.8 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்களும், தொண்டர் களும் அவருடைய நினைவிடத்தை பார்த்து வருகின்றனர்.
அதேபோல், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின்போது அவருடைய நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்படும். அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் வந்து மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவருடைய நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் அமைக்கப்பட்டது. அன்றைய நாள் முதல் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தை சுற்றி போலீசார் பாதுகாப்புக்காக தடுப்பு வேலி அமைத்து இருக்கின்றனர்.
தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருப்பதால் எம்.ஜி.ஆர். நினைவிடத்தை பார்க்க வரும் தொண்டர்கள், பொதுமக்கள் அதை தொட்டு வணங்க முடியவில்லை என்று வேதனையோடு தெரிவிக்கின்றனர்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் அரசு, அவரது நினைவிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தொண்டர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.