உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். இதன்படி ஒக்டோபர் மாத இறுதிக்குள் கிராம மட்டத்தில் கட்சி கிளை சங்கங்கள் நிறுவும் செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் மாத்திரமே தேசிய அரசாங்கத்தின் அடுத்த இரண்டு வருட பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். தேசிய அரசாங்கத்தின் பயணம் எமது கைகளிலேயே உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
தொகுதி மட்டத்தில் உள்ள பிரச்சினைகளையும் குறை்பாடுகளையும் தீர்ப்பதற்கு ஒரு மாத அவகாசம் தருகின்றோம். அவகாசத்தின் பின்னர் உரிய முறையில் செயற்படாத தொகுதிகளுக்கு சிறிகொத்தா உயர்பீடம் தலையிட்டு தொகுதி நடவடிக்கைகளை பொறுப்பேற்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடளாவிய ரீதியிலுள்ள 160 தேர்தல் தொகுதி அமைப்பாளர்களும் கட்சியின் செயற்பாட்டாளர்களும் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டம் நேற்று பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம், அமைச்சர்களான அகிலவிராஜ் காரியவசம், கயந்த கருணாதிலக ஆகியோர் முன்னிலை வகித்து கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சமுகமளிக்கவில்லை.
இதன்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிராம மட்டச் செயற்பாடுகள் குறித்தும் பரவலாகப் பேசப்பட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா விரிவான விளக்கத்தை தொகுதி அமைப்பாளர்களுக்கு வழங்கினார். கிராமத்தில் பிரபலமானவர்களையும் கிராமத்தின் மீது பற்றுக்கொண்டவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்ற விளக்கத்தை வழங்கினார். அத்துடன வேட்பாளர்கள் தெரிவின் போது புள்ளியிடல் செயற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதன்போது தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்தில் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து கட்சியின் பொதுச் செயலாளரு அமைச்சருமான கபீர் ஹாசிம் நீண்ட விளக்கத்தையும் எச்சரிக்கையையும் விடுத்தார்.
அமைச்சர் கபீர் ஹாசிம் தொகுதி அமைப்பாளர் முன்பு உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் கிராம மட்ட செயற்பாடுகளும் கிளை சங்கம் நிறுவும் ஏற்பாடுகளும் கடும் மோசமாக உள்ளன. அத்துடன் கட்சிக்கு அங்கத்தவர்களை இணைக்கும் அங்கத்துவ இணைப்பு திட்டத்திலும் தொகுதி அமைப்பாளர்களிடம் பெறும் குறைபாடுகள் நிலவுகின்றன. இவ்வாறான குறைபாடு இருக்கையில் எப்படி தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியும்?
ஆகவே இம்மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களை இணைப்பதற்கு விண்ணப்பம் கோரப்படும். அதன் பின்னர் நாம் துரிதமாக கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதன் பிரகாரம் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் கிராம மட்டத்தில் உள்ள கிளை சங்கங்கள் உடன் நிறுவப்பட வேண்டும்.
அதேபோன்று ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தொகுதி வாரியான செயற்றிட்டங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அத்துடன் கட்சிக்கு அங்கத்தவர்களை இணைக்கும் பணிகள் உள்ளிட்ட தேர்தலுக்கு தயாராகும் நடவடிக்கைகள் அனைத்தும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
ஏனெனில் டிசம்பர் மாதமளவில் தேர்தல் நடைபெறும். இந்த உள்ளூராட்சி தேர்தல் எமக்கு மிகவும் முக்கியமாகும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மாத்திரமே தேசிய அரசாங்கத்தை அடுத்த இரண்டரை வருடத்திற்கு வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். எமது கைகளிலேயே தேசிய அரசாங்கத்தின் பயணம் உள்ளது. எனினும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகும்
அத்துடன் கட்சி மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு ஒரு மாத காலஅவகாசம் தருகின்றோம். அதற்குள் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்றால் சிறிகொத்தா தலைமை யக உயர்பீடம் தொகுதி நடவடிக்கை பொறுப்பேற்கும் நிலைமை ஏற்படும் என்றார்.