வித்தியா வழக்கு – 9 பேரையும் மேலும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

355 0

vithiyaas-680x365யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய ஒன்பது பேரையும் தொடர்ந்து மூன்று மாதம் தடுத்து வைத்து விசாரணை செய்ய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் ஒன்பது சந்தேகத்திற்குரியவர்களுக்கும் ஒரு வருடத்துக்கான விளக்கமறியல் கடந்த மே மாதம் 11ஆம் திகதி நிறைவடைந்தது.
இதனை அடுத்து, சட்டமா அதிபரினால் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விசேட மனுவிற்கமைவாக மேலும் மூன்று மாதகாலம் நீடிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு நீடிக்கப்பட்ட மூன்று மாதம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் சந்தேகத்திற்குரியவர்கள் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகத்திற்குரியவர்களுக்கு பிணை வழங்குவது,  வழக்கிற்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தின் அடிப்படையில் விளக்கமறியல் காலத்தை மேலும் மூன்று மாதம் நீடிக்குமாறு, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டவாதி மன்றில் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சந்தேகத்திற்குரிய ஒன்பது பேரினதும்  விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரையில் நீடித்தார்.
அன்றைய தினம் இவர்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
இதனிடையே, வழக்கின் 4ஆம் 7ஆம் மற்றும் 9ஆம் சந்தேகத்திற்குரியவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சந்தேகத்திற்குரியவர்களை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரிய போதும், வழக்கின் பாரதூர தன்மை கருதி நீதிமன்றம் அதனை நிராகரித்தது.