அமெரிக்காவுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொருளாதார பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜப்பான் நிதியமைச்சர் டாரோ ஆசோ தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அமைச்சரவை இன்று மறுசீரமைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பதவியில் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஒக்டோபர் மாதம் உத்தியோகப்பூர்வ பேச்சவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முன்னர், அதற்கு தயாராகும் வகையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளேன்.
அத்துடன், ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுதல், பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தை செயல்படுத்தல் ஆகிய தொடர்பிலும் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது கருத்திற் கொள்ளப்படும்’ என்றும் குறிப்பிட்டார்.
ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் ஜப்பான் நிதியமைச்சர், அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் கலந்துரையாடியிருந்தார்.
அதன்போது இரு நாடுகளிடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.