வித்தியா படுகொலை வழக்கு – வழக்குத் தொடுநர் சாட்சியங்கள் நிறைவு

309 0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மூன்று நீதிபதிகளை கொண்ட நீதாய விளக்க அமர்வில், மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் மீதான விசாரணைகள் இன்றுடன் முடிவடைந்தன.

இதனையடுத்து பிரதிவாதிகளின் சாட்சியங்களையும், விளக்கங்களையும் முன்கொண்டு செல்ல 3  நீதிபதிகளும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரணை செய்யும் மூன்று பேர் நீதிமன்ற அமர்வு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய 3 நீதிபதிகளைக் கொண்ட நீதாய விளக்கம் இன்று நடைபெற்றது.

இதன்போது மனுதாரர் தரப்பின் இறுதிச் சாட்சியாக வழக்கின் 11 ஆவது சாட்சி பதிவு செய்யப்பட்டது.

சாட்சியப் பதிவின் பின்னர் சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து வழக்கை நெறிப்படுத்திய பிரதி மன்றாடியார் நாயகம் குமார்ரட்ணம் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்ததாக குறிப்பிட்டார்.

இதன்படி பிரதிவாதி தரப்புக்கு  சாட்சியமளிக்க, 4 வகையான தெரிவு நீதிபதிகளால் வழங்கப்பட்டது.

வழக்கின் 1 தொடக்கம் 9 வரையான எதிரிகள், தாங்கள் தனித்தனியாக சாட்சிக் கூண்டில் நின்று சத்தியப்பிரமானம் அல்லது உறுதிப்பிரமானம் செய்து, மன்றில் சாட்சியமளிக்க உரிமையுண்டு.

இவ்வாறு வழங்கப்படும் சாட்சியம் மன்றினால் பதிவு செய்யப்படுவதுடன், மனுதாரர் தரப்பில் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

இரண்டாவது ஒவ்வொரு பிரதிவாதியும் பிரதிவாதிக் கூண்டில் நின்றவாறே தனித்தனியான சாட்சியம் வழங்க முடியும்.

இதன் போது உறுதிப்பிரமாணம் செய்யத் தேவையில்லை.

குறுக்கு விசாரணை நடைபெறாது.

ஆனால் அவர்களின் சாட்சியம் மன்றில் பதிவு செய்யப்படும்.

மூன்றாவது ஒவ்வொரு பிரதிவாதியும் தங்கள் சார்பில் சாட்சிகளை அழைத்து சாட்சியத்தினை நெறிப்படுத்தவும் உரிமை உண்டு.

நான்காவது தெரிவாக அனைத்து பிரதிவாதிகளும்; எதனையும் மன்றில் தெரிவிக்காது மௌனமாக இருக்கவும் உரிமை உண்டு.

இந்த 4 தெரிவுகளில் ஒன்றை பிரதிவாதிகள்; தெரிவு செய்ய வேண்டும்.

இதற்காக அவர்களுக்கு 10 நிமிடம் கால அவகாசம் வழங்கப்படுகின்றது என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

இதனையடுத்து மீண்டும் வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பித்த போது பிரதிவாதிகள் தாம் சாட்சியம் வழங்க உள்ளதாக அறிவித்தனர்.

அத்துடன் அவர்கள் சார்பில் சாட்சியங்களை அழைத்து நெறிப்படுத்தவும் மன்றிடம் அனுமதி கோரியிருந்தனர்.

குறித்த நடவடிக்கைகளுக்காக கால அவகாசமும் மன்றிடம் கோரப்பட்டது.

இதன்படி ஒரு வாரகால அவகாசம் பிரதிவாதி தரப்புக்கு வழங்கப்பட்டது.

எனினும் சாட்சிகள், சாட்சியங்கள் தொடர்பில் மனுதாரருக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் தெரியப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் பிரதிவாதிகளின் விளக்கத்திற்காக எதிர்வரும் 28,29,30 ஆம் திகதிகள் மற்றும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி உட்பட 11 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதிவரை தொடர்ச்சியான விளக்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுவரையில் பிரதிவாதிகள் 9 பேரையும் எதிர்வரும் 28 ஆம் வரை விளக்கமறியலில் வைக்க நீதாய விளக்க மன்று கட்டளை பிறப்பித்தது.

Leave a comment