வடமாகாண இளம் பெண்கள் காவல்துறையில் இணைய வேண்டும் – அனந்தி சசிதரன்

19029 0

வடமாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காவல்துறையில் இணைய வேண்டும் என வடக்கு மாகாண மகளிர் விவகார புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றம் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் கேரியுள்ளார்.

வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த அதுவே சிறந்த வழியெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடமாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும்.

முன்னைய காலங்களில் காவல்துறை திணைக்களத்தில் பல்வேறு பணிகளில் பெண்கள் பணியாற்றியுள்ளனர்.

குhவல்துறை திணைக்களத்தில் பெண் அலுவலர்களுக்கு தனித்துவமான கௌரவம் வழங்கப்படுகிறது.

அலுவலகங்களில் கடமையாற்றுவது போல் காவல்துறை திணைக்களத்திலும் பகல் நேரக் கடமைகள் பெண் அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.

அரச பணியை விரும்புபவர்கள் காவல்துறை திணைக்களத்தையும் அரச திணைக்களமாகக் கருதி சேவையாற்ற வேண்டும்.

வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் காவல் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு கொடுக்கும் போது அங்கு கடமையாற்றும் ஆண் காவல்துறை அலுவலர்களிடம் முழுமையான விடயங்களைச் சொல்லாமல் விடுகிறார்கள்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றுக்கு வரும் வேளைகளில் முறைப்பாட்டுக்கும் பாதிக்கப்பட்ட பெண் அளிக்கும் சாட்சியத்துக்கும் பெரிதும் முரண்பாடுகள் காணப்படுவதைக் காணமுடிகிறது.

இந்த நிலை மாற வேண்டுமாயின் வட மாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காவல் சேவையில் இணையவேண்டும் எனவும் அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment