அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – சபாநாயகரிடம் கையளிப்பு

265 0

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் 32 உறுப்பினர்களது கையொப்பங்களுடன், இன்று இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது.

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக, பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோஜியஸ் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் போது, முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, அலோசியஸூடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமைச்சர் ரவியின் உறவினர் ஒருவருக்கு கொழும்பில் சொகுசு வீடொன்றை அர்ஜூன் அலோசியஸ் பெற்றுக்கொடுத்ததாகவும், அதற்கான வாடகையையும் அவரே செலுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதன்போது, தம் மீது எவ்வித குற்றங்களும் இல்லையென ஆணைக்குழுவில் நிரூபித்ததாக தெரிவித்த அமைச்சர் ரவி, சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள அதிகாரிகள் தமது நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment