நாமல் விற்ற கார் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

258 0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமாக இருந்து, பின்னர் பிறிதொருவரால் கொள்வனவு செய்யப்பட்ட சொகுசுக் கார் ஒன்றை விடுவிக்கத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மூன்று வாரங்களுக்குள் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இன்று இந்த வழக்கு கடுவலை நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கார் கடுவலை பகுதியிலுள்ள வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றில் (கெரேஜ்) வைக்கப்பட்டிருந்த நிலையில், நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து, இது தொடர்பில் அவர்களால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த வாகனம் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால் சேதத்திற்குள்ளாகலாம் என்பதால், அதனை விடுவிக்க உத்தரவிடுமாறு, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இன்று கோரினார். எனினும், தொடர்ந்தும் இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், குறித்த காரை விடுவிக்க, ஆட்சேபனை தெரிவிப்பதாக முறைப்பாட்டாளர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் இந்த வாகனத்தை விடுவிக்கத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு எதிர்வரும் 31ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a comment