தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியை நாடுகடத்த இலங்கையில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய இரு தடவைகள் முயன்றதோடு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புகளைப் பேணியதுடன் உயிராபத்தை ஏற்படுத்தும் வெடிபொருட்களையும் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கிளிநொச்சி நீதிமன்றில் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சூத்திரதாரி எனக் கருதப்படுபவர் அவுஸ்திரேலியாவில் வாழ்வதாக கண்டறியப்பட்டு நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
குறித்த குற்றச் நாட்டின் பெயரில் கடந்த ஜனவரி 15ம் திகதி வடமராட்சி , கிளிநொச்சி , பரந்தன் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த நால்வர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ் வழக்குத் தொடர்பான அடுத்த கட்ட விசாரணைக்காக குறித்த குழுவினரை வழிநடாத்தியதாக சந்தேகிக்கப்படும் அவுஸ்திரேலியவாசியை நாடு கடத்துவதற்கான முறைப்படியான ஆவணங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்களுடன் மூவர் அடங்கிய குழுவினர் அவுஸ்திரேலிய நாட்டிற்கு பயணிக்கின்றனர்.
இவ்வாறு முறைப்படியான விசாரணைகளை மேற்கொண்டு சட்ட ரீதியில் நாடுகடத்தல் வேண்டுகோளைச் சமர்ப்பிக்கும் ஆவணங்களை பரிசீலிக்கும் அவுஸ்ரேலிய அரசு இலங்கையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் குறித்த சந்தேக நபரை நாடுகடத்தும் உத்தரவினைப் பிறப்பிக்கும்.